ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» arumuganeri » ஆதரவற்றோருக்காக நடைபயணம் ஆறுமுகனேரியில் இங்கிலாந்து வழக்குரைஞருக்கு வரவேற்பு

Image result for ஆதரவற்றோருக்காக நடைபயணம்
இந்திய ஆதரவற்ற குழந்தைகளுக்காக நடைபயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து வழக்குரைஞர் ஆறுமுகனேரிக்கு வெள்ளிக்கிழமை வந்தார். அவரை பொதுமக்கள் பாராட்டி வரவேற்றனர்.
இந்தியாவிலுள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் வகையில் நிதி திரட்டுவதற்காக கன்னியாகுமரியிலிருந்து கொல்கத்தா வரை 1500 மைல் தூரம் இங்கிலாந்து வழக்குரைஞர் பேட்ரிக் பட்தலே (62) நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
இவர் தனது பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் இந்தியாவுக்கு வந்து மேற்குவங்கம் கொல்கத்தா பகுதியிலுள்ள ஆதரவற்ற ஏழை குழந்தைகளுக்கு கல்வி மற்றும் விடுதி வசதி செய்துகொடுத்து சமூக சேவையாற்றி வருகிறார். இப்பணியில் இவருடன் இங்கிலாந்திலுள்ள பியூச்சர் ஹோப் அறநிலைய அமைப்பும், ஜார்ஜ் டெலகிராப் அமைப்பும் இணைந்து செயலாற்றி வருகின்றன.
பேட்ரிக்கின் மனைவி லூசி, இங்கிலாந்தில் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களது 4 மகள்களில் ஒருவரான பபுள் கொல்கத்தாவில் பேட்ரிக்குடன் இணைந்து தொண்டாற்றி வருகிறார்.
இதற்கிடையில், காந்தி ஜெயந்தி தினத்தில் (அக். 2) கன்னியாகுமரியில் நடைபயணத்தை தொடங்கிய பேட்ரிக் பட்தலே திருச்செந்தூர், அடைக்கலாபுரம் வழியாக ஆறுமுகனேரிக்கு வந்தார். அவரை பொதுமக்கள் பாராட்டி, வரவேற்றனர்.
அப்போது அவர் கூறியது: கொல்கத்தாவில் 120 ஆதரவற்ற குழந்தைகளுக்காக பள்ளிக்கூடம் மற்றும் தங்கும் விடுதியை பியூச்சர் ஹோப் உதவியுடன் நடத்திவருகிறோம். மேலும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சி பட்டறையும் அங்கு நடத்தபட்டு வருகிறது.
இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நிதிதிரட்டவும் கன்னியாகுமரியிலிருந்து கொல்கத்தாவுக்கு 1500 மைல் தொலைவு நடைபயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி முதல் 180 நாள்களுக்கு மட்டுமே எனக்கு விசா இருப்பதால் 2017 பிப்ரவரி மாதத்துக்குள் கொல்கத்தா சென்றடைய திட்டமிட்டுள்ளேன். பயண வழியிலுள்ள நிறுவனங்கள் எங்களது சமூக சேவைப் பணிகளுக்கு நிதியுதவி வழங்கி உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்தார் அவர்.
பின்னர், பயணத்தைத் தொடர்ந்த அவர், ஆத்தூர் வழியாக தூத்துக்குடி புறப்பட்டுச் சென்றார்.

Tags: arumuganeri

0 comments

Leave a Reply