ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » உடைந்து கிடக்கும் மழைநீர் வடிகால் தொட்டி மூடிகள்

Image result for உடைந்து கிடக்கும் மழைநீர் வடிகால்
தூத்துக்குடி மாநகரில் ரூ.7 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட நடைமேடையுடன் கூடிய மழைநீர் வடிகால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே போடப்பட்ட இடங்களில் மேல்தள மூடிகள் ஆங்காங்கே உடைந்து கிடப்பதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், மாநகரின் முக்கிய சாலைகளில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு கூட போதுமான அளவில் நடைபாதை இல்லை. ஆங்காங்கே முக்கிய சாலைகளிலுள்ள சாலையோர ஆக்கிரமிப்பு களாலும், நடைபாதை என்பதே இல்லாத காரணத்தினாலும் பொதுமக்கள் சாலையிலேயே நடந்துசெல்லும் நிலைக்கு உள்ளாகி வருகின்றனர். இதற்கிடையே தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் முக்கிய சாலைகளில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு வசதியாக நடைமேடையுடன் கூடிய புதிய நடைபாதை அமைக்கப்படும் என்று உறுதி கூறப்பட்டது. பல லட்சம் மதிப்பில் இத்திட்டப்பணிகளுக்கான தீர்மானமும் மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு தூத்துக்குடி மாநகரின் முக்கிய சாலையான பாளை ரோட்டில் பல்வேறு இடங்களில் மழைநேரங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து பாளை ரோடு ராஜாஜி பூங்கா பகுதியிலிருந்து காய்கனி மார்க்கெட், ஜெயராஜ்ரோடு வழியாக பக்கிள் ஓடைக்கு மழைநீரை கொண்டு செல்லும் வகையில் ரூ.7 கோடி மதிப்பில் நடைமேடையுடன் கூடிய மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது. இந்த நடைமேடை ரோட்டினை விட மிகவும் உயரமான அளவில் கட்டப்பட்டதால் சாலையோரம் கடை வைத்திருக்கும் வியாபாரிகளும், குடியிருப்பாளர்களும் பெரும் பாதிப்பிற்கு ஆளானார்கள். 

பல அடி உயரத்திற்கு கட்டப்பட்ட இந்த மழைநீர் வடிகால் நடைமேடையால் சாலை சந்திப்பு பகுதிகளை வாகனங்கள் கடந்து செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. 

இந்நிலையில், இந்த புதிய மழைநீர் வடிகாலின் மேல்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் ஆங்காங்கே கான்கிரீட் தளம் உடைந்து பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த வழியாக நடந்துசெல்லும் வயதானவர்கள், குழந்தைகள் பள்ளம் தெரியாமல் மழைநீர் கால்வாய்க்குள் தவறி விழுந்திடும் அபாய நிலையும் பலநாட்களாக தொடர்கிறது. 

இரவு நேரங்களில் மூடிஉடைந்திருப்பது தெரியாமல் பொதுமக்கள் தவறி விழுந்து பாதிக்கப்பட்டு வரும் சம்பவங்களும் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டு தான் வருகிறது. மழைநீர் செல்வதற்கு வழியில்லாத நிலையில் கட்டப்பட்ட இந்த வடிகாலுடன் கூடிய நடைமேடை மாநகர மக்களுக்கு பெரும் இடையூறாக இருந்துவரும் நிலையில், தற்போது அதில் நடந்துசெல்லும் மக்களின் உயிரை பறிக்கும் அபாய மேடையாக மாறியுள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

எனவே, பழுதாகி உடைந்து கிடக்கும் மழைநீர் வடிகால்களின் மூடியை சரிசெய்ய வேண்டும். பணியை முழுமையாக நிறைவேற்றி சாலையில் தேங்கும் மழைநீரை பக்கிள் ஓடைக்கு கொண்டும் செல்லும் வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments

Leave a Reply