ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » தசரா திருவிழா இன்று (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டம் , திருச்செந்தூர் அருகே  குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் தசரா திருவிழா  பிரசித்தி பெற்றது. 
இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள். இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா இன்று (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
இதை முன்னிட்டு நேற்று மதியம் காளி பூஜை நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் மங்கள இசை, நையாண்டி மேளம், இரவில் மகுட இசை, கரகாட்டம், பரதநாட்டியம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடந்தது.
இன்று (சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் திருவீதி உலா நடந்தது. பின்னர் காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து 8.45 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இதில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், யூனியன் கவுன்சிலர் அம்மன் நாராயணன், மாநில இந்து முன்னணி துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், தூத்துக்குடி அறநிலையத்துறை உதவி ஆணையர் அன்னக்கொடி, கோவில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கொடியேற்ற நிகழ்ச்சியை தொடர்ந்து விரதம் இருந்து வரும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.

இன்று மதியம், மாலையில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது. இரவு 9 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். 
தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் திருவிழா நாட்களில் தினமும் காலை, மதியம் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது. மாலையில் சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பரதநாட்டியம், மகுட இசை போன்றவை நடக்கிறது. இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
தசரா திருவிழாவின் பத்தாம் நாளான அக்.10 ஆம் தேதி(திங்கள்கிழமை)இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையைத் தொடர்ந்து சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் முன் எழுந்தருளும் அம்மன் மகிசாசூரனை வதம் செய்கிறார்.இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொல்வார்கள். சூரசம்ஹாரத்தைத் தொடர்ந்து அக்.11 ஆம் தேதி(செவ்வாய்கிழமை)அதிகாலை 1 மணிக்கு கடற்கரை மேடை,சுவாமி சிதம்பரேஸ்வரர் கோவில்,கோவில் கலையரங்கம் ஆகியவற்றில் எழுந்தருளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் வீதியுலா புறப்படும் அம்மன் மாலை 5.30 மணிக்கு
கோவிலை வந்தடைவார்.அதனைத் தொடர்ந்து பக்தர்கள் காப்பு களைத்து விரதத்தை முடிப்பார்கள்.இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறும்.விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சி.லட்சு மணன்,உதவி ஆணை யர் மொ.அன்னக் கொடி,கோயில் நிர்வாக இரா.இராமசுப்பிரமணியன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர் 

0 comments

Leave a Reply