ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» ஸ்ரீவைகுண்டம் » 53 குளங்களையும் தூர்வார வேண்டும்

ஸ்ரீவைகுண்டம் மற்றும் மருதூர் அணைகளுக்கு கீழ் உள்ள 53 குளங்களையும் தூர்வார வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் கடைசி அணையான ஸ்ரீவைகுண்டம் அணை 1869ம் ஆண்டு அப்போதைய கலெக்டர் பக்கிள்துரை என்பவரது முயற்சியால் கட்டப்பட்டது. இந்த அணையில் இருந்து வடகால், தென்கால் என இரண்டு கால்வாய்கள் மூலம் தண்ணீர் பிரித்து கொண்டு செல்லப்பட்டு வாய்க்கால் நேரிடை பாசனம் மற்றும் குளத்து பாசனம் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடந்து வந்தது. இதனால் இப்பகுதியில் இருபோகம் விவசாயம் நடந்தது. மேலும் குளம், வாய்க்கால்களில் அதிகளவு தண்ணீரை சேமித்து வைத்திருக்க முடியாததால் கோடை காலத்தில் இப்பகுதியில் கடுமையான வறட்சியை சந்தித்து இப்பகுதியில் நிலத்தடி நீரும் குறைந்து குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில் தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு 20 எம்.ஜி.டி திட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து நேரிடையாக பெரிய குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தில் தண்ணீர் எடுக்கப்பட்டு வருவதால் வடகால் வாய்க்காலில் தண்ணீர் வருவதே கேள்விகுறியாகிவிட்டது. 

இதனால் விவசாயம் மேலும் இப்பகுதியில் அழிந்து வருகிறது. அணை மற்றும் குளங்களை தூர்வார கோரி பல்வேறு விவசாய சங்கங்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை தொடாந்து நடத்தி வந்தனர்.  இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி அணையை மட்டும் தூர்வார தேசிய பசுமை தீர்பாயம் உத்தரவிட்டு தூர வாரும் பணி நடந்தது. இந்த தூர்வாரும் பணியும் ஒழுங்காக நடைபெறவில்லை என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்து வந்தனர்.
 
இந்நிலையில் அணையை மட்டும் தூர் வாரினால் எந்தவித பிரயோஜனமும் இல்லை. அணைக்கு கீழ் உள்ள 53 குளத்தையும் தூர்வார அரசுக்கு உத்தரவிட வேண்டும் என ஸ்ரீவைகுண்டம் அணை நீர்பிடிப்பு குளங்கள் பாதுகாப்பு சங்க தலைவர் புதுக்கோட்டை காந்திமதிநாதன் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் 16 மாதங்கள் பிறகு கடந்த மாதம் 27ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் 53 குளங்களையும் தூர்வார வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது. 

இதுகுறித்து காந்திமதிநாதன் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக இப்பகுதியில் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காததால் விவசாயம் பாதியாக குறைந்து விட்டது. இருபோக விளைச்சல் கண்ட இப்பகுதியில் ஒரு போக விளைச்சல் காண்பதே அரிதாகிவிட்டது. இதற்கு காரணம் ஸ்ரீவைகுண்டம் அணை மற்றும் குளங்கள் அனைத்தும் தூர் வாரப்படாததால் மணல் மேடாகி விட்டது. இதனால்தான் நாங்கள் விவசாயிகளை திரட்டி இப்பகுதியில் உள்ள குளங்களை எல்லாம் தூர்வார நடடிவக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தோம். 

ஆனால் எந்தவித பிரயோஜனமும் இல்லாததால் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கால் செய்திருந்தோம். அதற்கு இப்போது நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது. இனி இப்பகுதியில் உள்ள குளங்களை தூர் வாருவது அரசு கையில் தான் உள்ளது. எனவே விவசாயிகளின் நலன் கருதி அரசு இப்பகுதியில் உள்ள குளங்களை தூர்வார காலம் தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

0 comments

Leave a Reply