ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்படாத 21 பள்ளிகள்

தூத்துக்குடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட போது  இணைக்கப்பட்ட 5 பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள 21 பள்ளிகள் இதுவரை மாநகராட்சியுடன் இணைக்கப்படவில்லை. இதனால் சலுகைகளை பெற முடியாமல் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 
தூத்துக்குடி கடந்த 2008ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது அருகில் இருந்த மீளவிட்டான், சங்கரபேரி, தூத்துக்குடி ரூரல், முத்தையாபுரம், அத்திமரப்பட்டி ஆகிய 5 பஞ்சாயத்து பகுதிகளும் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இப்பகுதி மக்களுக்கு மாநகராட்சி மூலமே அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதே நேரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள அனைத்து அலுவலகங்களும் மாநகராட்சி தகுதி பெற்ற நிலையில் அந்த பகுதியில் இயங்கிவரும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் இதுவரை பஞ்சாயத்து பகுதியில் இருப்பது போல் தான் செயல்பட்டு வருகிறது. மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளான அத்திமரப்பட்டி, ஜெ.எஸ்.நகர், பாரதிநகர், எம்.சவேரியார்
புரம், எம்.தங்கம்மாள்புரம், முத்தையாபுரம், கேம்ப்-1, கேம்ப்-2, துறைமுகம், வீரநாயக்கன்தட்டு, முடுக்குகாடு, மடத்தூர், சில்வர்புரம், பண்டாரம்பட்டி, மீளவிட்டான், காமராஜ் நகர், தேவர்காலனி, சங்கரப்பேரி, ஆரோக்கியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப்பள்ளிகள், சி.எஸ்.ஐ. திருமண்டலத்திற்குட்பட்ட டி.என்.டி.டி.ஏ. தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் மற்றும் துறைமுக நிர்வாக பள்ளிகள், ஏ.வி.எஸ். நிர்வாக பள்ளிகள் என சுமார் 21 பள்ளிகள் உள்ளன. 

இந்த பள்ளிகள் மாநகராட்சியுடன் இதுவரை இணைக்கப்படாததால் இங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சலுகைகள் கிடைக்காமல் உள்ளது. மேலும் மாநகர உதவித் தொடக்ககல்வி அலுவலகத்துடன் இந்த பள்ளிகள் இணைக்கப்படாததால் இதில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் அலுவல் ரீதியாக புதுக்கோட்டையில் உள்ள உதவித் தொடக்க கல்வி அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் இடமாறுதல் பெறும்போதும் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, இப்பள்ளிகளை உடனடியாக தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைத்து ஆசிரியர்களுக்கு சலுகைகள் தாமதமின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சாமுவேல்துரை கூறுகையில், ‘‘மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் சிறுபான்மை நிறுவன பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை மாநகராட்சியுடன் இணைத்து அவர்களின் அனைத்து ஆவணங்களையும் நகர உதவி மற்றும் கூடுதல் உதவித்தொடக்ககல்வி அலுவலகத்திற்கு மாற்றவேண்டும்’’ என்றார்.

0 comments

Leave a Reply