ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » வழக்குரைஞர்கள் உண்ணாவிரதம்

தூத்துக்குடியில் வழக்குரைஞர்கள் மீது நீதிபதிகளே நடவடிக்கை எடுக்கும் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தாற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட 126 வழக்குரைஞர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தியும் தூத்துக்குடியில் வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  வழக்குரைஞர்கள் மீது நீதிபதிகளே நடவடிக்கை எடுக்கலாம் என்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் வழக்குரைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு  உண்ணாவிரதம், ரயில் மறியல் என பல்வேறு போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். நீதிமன்றங்களைச் சுற்றி 100 மீட்டர் தொலைவுக்குள் எந்தவித போராட்டங்களும் நடைபெறக் கூடாது என  நீதிமன்ற உத்தரவு இருப்பதால் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் நீதிமன்ற வளாகத்திலும், நீதிமன்ற வளாகத்தைச் சுற்றியும் குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே நீதிமன்றத்துக்குள் சென்ற மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகரனை முற்றுகையிட்ட வழக்குரைஞர்கள் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போலீஸாரை வெளியே செல்ல உத்தரவிடும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
பின்னர் போலீஸாரை வெளியே செல்லும்படி நீதிபதி ராஜசேகரன் உத்தரவிட்டார். மேலும் நீதிபதி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் ராஜாஜி பூங்கா முன்பு வழக்குரைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

0 comments

Leave a Reply