ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » தூத்துக்குடி தேவாலயத்தில் சம்பவம்: ஆசிரியையை வெட்டிக் கொலைImage result for பிரான்ஸினா
தூத்துக்குடியில் புதன்கிழமை, தேவாலயத்துக்குள் புகுந்து ஆசிரியையை அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு, இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். ஒருதலைக் காதல் விவகாரத்தால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
தூத்துக்குடி ஜார்ஜ் சாலை இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த நியூமேன் என்பவரது மகள் பிரான்ஸினா (25). சண்முகபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலைபார்த்து வந்தார்.
புதன்கிழமை காலை வழக்கம்போல பள்ளிக்கு புறப்பட்டுச் சென்ற அவர், பள்ளி அமைந்துள்ள வளாகத்தின் மற்றொரு பகுதியில் உள்ள தூய பேதுரு ஆலயத்துக்குச் சென்று வழிபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, ஆலயத்துக்குள் புகுந்த இளைஞர் பிரான்ஸினாவை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டார். இதில், தலை, கழுத்து, கை ஆகிய இடங்களில் பலத்த வெட்டுக் காயமடைந்த பிரான்ஸினா மயங்கிவிழுந்தார். அங்கிருந்தோர் அவரை உடனடியாக மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார்.
இளைஞர் தற்கொலை:   இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ், மாநகர உதவிக் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். தூத்துக்குடி தென்பாகம் போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
விசாரணையில், ஆசிரியை பிரான்ஸினாவை கொலை செய்தது தூத்துக்குடி மரக்குடி தெருவைச் சேர்ந்த ஜோதி கோமஸ் மகன் ஜீகன் கோமஸ் (24) எனத் தெரியவந்தது. அவரைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர்.
அப்போது, தலைமறைவான ஜீகன் கோமஸ் மணல் தெருவில் ரெமீஸ் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. போலீஸார் சென்று சடலத்தை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரெமீஸ் வீட்டில் சில ஆண்டுகளாக ஆள்கள் யாரும் இல்லாததால் இப்போது புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதை ஜீகன் கோமஸ் தெரிந்துகொண்டு ஆசிரியை பிரான்ஸினாவை வெட்டிவிட்டு, அங்கு சென்று தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.
திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்: ஆசிரியை பிரான்ஸினாவுக்கு செப்டம்பர் 8ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அவர் கொலை செய்யப்பட்டதால், குடும்பத்தினரும், உறவினர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஒருதலைக் காதல் விவகாரம்? ஆசிரியை பிரான்ஸினாவை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட ஜீகன் கோமஸ் 10ஆம் வகுப்புவரை படித்துள்ளார். கூலி வேலைகளுக்கு மட்டுமே சென்றுவந்த அவர், சில மாதங்களாக பிரான்ஸினாவை பின்தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக சில நாள்களுக்கு முன்பு பிரான்ஸினா தனது குடும்பத்தினரிடம் தெரிவித்ததாகவும், அவர்கள் ஜீகன் கோமஸை அழைத்து எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில், பிரான்ஸினாவை ஜீகன் கோமஸ் ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளதாகவும், அவருக்கு வேறிடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்து அவரைக் கொன்றுவிட்டு ஜீகன்கோமஸ் தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிவித்தனர்.

0 comments

Leave a Reply