ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» சென்னை » வியாசர்பாடி குறித்து விருது பெற்றவர்கள் பெருமிதம்

வியாசர்பாடியில் வியாழக்கிழமை நடைபெற்ற நடன இசை நிகழ்ச்சியில் பங்கேற்றோர்.
சாதனையாளர் விருது பெற்ற கேரம் வீராங்கனை இளவழகி.
ரௌடிகள், வன்முறையாளர்களின் களமாக இருந்த வியாசர்பாடி, இன்று உழைக்கும் வர்க்கத்தினரின் பூமியாக மாறியுள்ளது என்று சென்னை தின கொண்டாட்டத்தில் விருது பெற்றவர்கள் கூறினர்.
ஆர்வம், சியர்ஸ் உள்பட 10 தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து சியோசா எனும் அமைப்பு நடத்திய சென்னை தின கொண்டாட்ட நிகழ்ச்சி வியாசர்பாடியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அப்போது, இளைஞர்கள் நடத்திய நடன நிகழ்ச்சி பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது.
இதையடுத்து, கேரம் விளையாட்டில் 3 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற இளவழகி, பாடகர் கானா உலகநாதன், ஐ.சி.எஃப். கால்பந்து அணியின் கோல்கீப்பர் அகஸ்டின், ஏழைக் குழந்தைகளுக்கு இலவச தனிப்பயிற்சி வகுப்புகள் நடத்தும் சிகாமணி, கல்வியாளர் ராஜா சாமுவேல், எழுத்தாளர் அமிர்தம் சூர்யா, தொழிலதிபர் குருமூர்த்தி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இவர்கள் வியாசர்பாடியின் சிறப்புகள் குறித்து கூறியதாவது:-
பாரம்பரியம் மிக்க சென்னை மாநகரில் வியாசர்பாடிக்கு தனிச்சிறப்பு உள்ளது. சென்னை உயர்நீதிமன்றம், சென்ட்ரல் ரயில் நிலையம், தலைமைச் செயலகம் உள்பட பாரம்பரியம் மிக்க கட்டடங்களின் கட்டுமானப் பணிகளில் வியாசர்பாடியைச் சேர்ந்த தொழிலாளர்கள்தான் ஈடுபட்டனர்.
உழைக்கும் வர்க்கத்தினர் மிகுந்த பகுதியான வியாசர்பாடி பல நூற்றாண்டுகள் பாரம்பரியம் மிக்கதாகும். இங்கு சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட ரவீசுவரர் கோயில் உள்பட தொன்மை வாய்ந்த பல இடங்கள் உள்ளன.
ஒரு காலத்தில் வியாசர்பாடி என்றாலே வன்முறை, ரௌடிகள் நடமாட்டம் மிகுந்த பகுதி என்று கூறும் நிலை இருந்தது. இப்போது அந்த நிலை மாறியுள்ளது.
பெரும்பாலான மக்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்தாலும் கலை, விளையாட்டு உள்பட அனைத்து துறைகளிலும் சாதனைகள் நிகழ்த்தி வருகின்றனர். இவர்களை தமிழக அரசு மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் நிதியுதவி, சலுகைகளை வழங்க வேண்டும் என்றனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜி.பரமசிவம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

0 comments

Leave a Reply