ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » மின்னல் பாய்ந்து சிறுவன் சாவு

Image result for சிறுவன் சாவு
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை இடி, மின்னலுடன் பெய்த மழையில் மின்னல் தாக்கியதில் சிறுவன் உயிரிழந்தாரா என்பது குறித்து போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காமநாயக்கன்பட்டி அருகேயுள்ள வடக்கு வண்டானத்தில் பவர் கிரீட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் மின் பகிர்மான மையம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
 இந்நிறுவனத்தின் சார்பில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணியில் ஜார்கண்ட் மாநிலம், டெகா தெக்கா கிராமத்தைச் சேர்ந்த சுமார் 40 பேர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் குருவிநத்தம் கிராமப்பகுதியில் குடிசையில் தங்கி வேலைக்கு சென்று வருகின்றனர்.  இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மழையினால் குடிசைப் பகுதி அருகே விளையாடிக் கொண்டிருந்த சுரேஷ்ராஜ் - பகுனிதேவி தம்பதி மகன் தினேஷ்(4)  மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சுக்கான் மகன் ராம்பர்தேவ்(12)  ஆகிய இருவரும் மயங்கி கீழே விழுந்தனர்.
பின்னர் இருவரையும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதில் தினேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ராம்பர்தேவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின், வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டாராம்.
 தினேஷ் உயிரிழந்தது குறித்து அவரது குடும்பத்தினர் வருவாய்த் துறைக்கோ, காவல் துறைக்கோ எவ்வித தகவலும் தெரிவிக்காமல் அவர்கள் குடியிருக்கும் பகுதி அருகே அடக்கம் செய்துவிட்டனராம். இந்நிலையில், இதுகுறித்த தகவல் வருவாய்த் துறையினருக்கு திங்கள்கிழமை கிடைத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று இறந்த தினேஷின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
 மேலும், இதுகுறித்த விசாரணை கொப்பம்பட்டி காவல் நிலையத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணைக்குப் பிறகு தான் தினேஷின் சடலத்தை போலீஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்த பிறகுதான், அவர் மின்னல் தாக்கி இறந்தது உறுதி செய்யப்படும்.
மேலும், காயமடைந்த ராம்பர்தேவ் பெற்றோரிடமும் திங்கள்கிழமை கொப்பம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தினர்.

0 comments

Leave a Reply