ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » இரவு ஒரு மணி வரை திருச்செந்தூரில் பக்தர்கள் வசதிக்காக கடைகளைத் திறந்துவைக்க அனுமதிக்க வேண்டுமென வணிகர்கள் கோரிக்கை

Image result for கடை வியாபாரம் பெருக
திருச்செந்தூரில் பக்தர்கள் வசதிக்காக இரவு ஒரு மணி வரை கடைகளைத் திறந்துவைக்க அனுமதிக்க வேண்டுமென வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக கோட்டாட்சியர் தெ.தியாகராஜனிடம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தெற்கு மாவட்டத் தலைவர் ரெ.காமராசு தலைமையில் வணிகர்கள் கொடுத்த மனு:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தமிழ் வருடப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆவணி, மாசித் திருவிழா, கந்த சஷ்டி சூரசம்ஹாரம், தைப்பொங்கல், தைப்பூசம் என வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுகிறது. மேலும், கோயிலுக்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் பாதயாத்திரையாகவும், பல்வேறு வாகனங்களிலும் இரவு, பகலாக வந்து செல்கின்றனர்.
வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் வசதிக்காக திருச்செந்தூருக்கு மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி வழியாக நாள்தோறுமே இரவு முழுவதும் பேருந்து வசதிகள் உள்ளன. அவ்வாறு பேருந்தில் வரும் பக்தர்கள் திருச்செந்தூர் நகரில் தேநீர் அருந்துவதும், இரவு நேர சிற்றுண்டி உண்பதும் வழக்கம். பக்தர்கள் மற்றும் பொதுமக்களை நம்பியே, நகரில் வணிக நிறுவனங்கள் அனைத்தும் உள்ளன. தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களிலும், ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்களிலும் பகலைப்போன்று இரவும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திருச்செந்தூரில் மட்டுமே பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் நலனுக்கு எதிராக இரவு நேர கடைகளைத் திறக்கக் கூடாது என காவல்துறை கூறி வருகிறது. எனவே, பக்தர்கள் வசதிக்காக, தினசரி இரவு ஒரு மணி வரை கடைகளை திறந்து வைக்க அரசு அனுமதிக்க வேண்டும்.
காவல்துறை அத்துமீறல்: திருச்செந்தூரில் கடந்த சில நாள்களாகவே, நகரில் உள்ள சிறு வியாபாரிகள், உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடை ஊழியர்களை இரவு 10 மணிக்கே கடைகளை அடைக்குமாறு காவல்துறை அதிகாரிகள் நேரில் வந்து வற்புறுத்துகின்றனர். இச்செயலை வணிகர் சங்க பேரமைப்பு கண்டிப்பதுடன், வணிகர்களின் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 comments

Leave a Reply