ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» சென்னை » சென்னை தத்தளிக்கிறது: நாளையும் பலத்த மழை எச்சரிக்கை

மிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 28–ந்தேதி தொடங்கியது. வங்க கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னை முழுவதும் பலத்த மழை பெய்தது.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை கொட்டியது. காற்றழுத்த தாழ்வு நிலை கரையை கடந்ததை தொடர்ந்து கடந்த 9–ந்தேதி மதியம் முதல் மழை ஓய்ந்தது.
அதன்பிறகு 11–ந்தேதி மாலை முதல் சென்னை நகரம் முழுவதும் பலத்த மழை கொட்டியது. மறுநாள் 12–ந்தேதியும் கனமழை பெய்தது. 13–ந்தேதி மதியம் முதல் மழை சற்று ஓய்ந்தது. 14–ந்தேதி முழுவதும் மழை பெய்யவில்லை.
இந்த நிலையில் தென் கிழக்கு வங்கக்கடலில் புதிதாக உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையானது 14–ந்தேதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. பின்னர் காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்தது. இதனால் நேற்று காலையில் இருந்து சென்னை முதல் தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இன்னும் 2 நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஏற்கனவே பெய்திருந்த மழையில் சென்னையில் பல இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்திருந்தது.
இந்த நிலையில் நேற்று காலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக சென்னை நகரமே வெள்ளத்தில் மிதந்து தத்தளிக்கிறது. குடியிருப்பு பகுதியில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
கொளத்தூர், பெரம்பூர், மடிப்பாக்கம், போரூர், தாம்பரம், குரோம்பேட்டை, கிண்டி, சூளைமேடு, வடபழனி, அரும்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட சென்னையின் அனைத்து பகுதிகளிலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பெரம்பூர் ஜமாலியாவில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பஸ் உள்ளிட்ட வாகனப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பஸ்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.
வடபழனி திருநகர் பகுதியில் உள்ள கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வடபழனியில் இருந்து கோயம்பேடுக்கு 100 அடி சாலை வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு செல்லும் பஸ்கள் வடபழனியில் இருந்து சின்மயா நகர் வழியாக கோயம்பேடுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
வடபழனி 100 அடி சாலை கால்வாயில் ஓடும் வெள்ளம் சூளைமேடு பகுதிக்குள் புகுந்தது. இதனால் சூளைமேட்டின் பெரும்பாலான தெருக்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. வெள்ளம் தேங்கிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஆவடி அருகேயுள்ள நெமிலிச்சேரி ஏரி உடைந்ததால் ஆவடி காமராஜர் நகர் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பட்டரவாக்கம் பகுதியும் வெள்ளத்தில் மிதக்கிறது.
சென்னை மாநகரம் முழுவதும் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதப்பதால் அந்த பகுதி மக்கள் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். வீடுகளை சுற்றி இடுப்பளவுக்கு தண்ணீர் நிற்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது.
கீழ் தளங்களில் வசிப்பவர்களின் பெரும்பாலான வீடுகளில் தண்ணீர் புகுந்து இருப்பதால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருள் தட்டுப்பாடு மற்றும் மின்சாரம் துண்டிப்பு காரணமாக பெரும்பாலான மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வீடுகளை சுற்றி வெள்ளம் தேங்கி கிடப்பதால் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களை வீடுகளில் இருந்து வெளியே எடுக்க முடியவில்லை. இதனால் வீடுகளில் இருந்து நடந்தே மெயின் ரோட்டுக்கு சென்று பஸ்கள் மற்றும் ஆட்டோக்களை பிடித்து அலுவலகம் சென்றனர்.
கோயம்பேடு மார்க்கெட் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்பதால் காய்கறிகள் வரத்து மிகவும் குறைந்தது. வியாபாரிகளும் கோயம்பேடுக்கு சென்று காய்கறி வாங்கி செல்லமுடியாமல் தவிக்கிறார்கள்.
இதனால் சென்னை நகரம் முழுவதும் காய்கறிகள் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
எழும்பூர் காந்தி இர்வின் பாலம் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த வழியாக சென்ட்ரலுக்கு பஸ்கள், கார்கள் செல்ல முடியவில்லை. அரும்பாக்கத்தில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக சென்ட்ரலுக்கு செல்லும் பஸ்கள், கார்கள் போன்றவை ஈ.வெ.கி.சம்பத் சாலை வழியாக திருப்பி விடப்பட்டன.
பெரும்பாலான சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் சிக்கின. மேற்கு மாம்பாலம் அரங்கநாதன் சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த வெள்ளத்துக்குள் பஸ் ஒன்று செல்ல முயன்றது. ஆனால் வெள்ளத்தை கடந்து செல்ல முடியாமல் சுரங்கப் பாதையில் பஸ் சிக்கியது. மேலும் அதிக அளவில் வெள்ளம் வந்ததால் பஸ் முழுவதும் சுரங்கப் பாதையில் மூழ்கியது. அதில் இருந்த பயணிகள் முன்கூட்டியே சுதாரித்துக்கொண்டு இறங்கியதால் தப்பினர்.
புரசைவாக்கம், ஓட்டேரி பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் பொதுமக்கள் யாரும் வெளியே வரமுடியவில்லை.
இந்த நிலையில் இன்றும் காலை முதல் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருக்கிறது. நாளையும் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை நகர மக்கள் அதை எதிர்கொள்வது எப்படி என்ற தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

0 comments

Leave a Reply