ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » வெளிநாட்டு வேலை மோகம் - சவுதி அரேபியாவில் கொத்தடிமையாக்கப்பட்ட தூத்துக்குடி பெண், மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் ஊர் திரும்பினார்.


சவுதி அரேபியா நாட்டில் கொத்தடிமையாக நடத்தப்பட்ட தூத்துக்குடி பெண், மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் ஊர் திரும்பினார். அவரை உறவினர்கள் மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர்.

தூத்துக்குடி மேட்டுப்பட்டி உமையாள்புரத்தைச் சேர்ந்தவர், தமிழ்செல்வி. அவரிடம், அதிக சம்பளத்துடன் வேலை என்று கூறி பட்டுக்கனி, செல்வக்கனி ஆகியோர் சேர்ந்து, சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைத்ததாக தெரியவருகிறது. ஆனால் அங்கு தமிழ்செல்வியை கொத்தடிமையாக நடத்தி உள்ளனர். இதுகுறித்து தமிழ்செல்வி தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் குடும்பத்தினர் தமிழ்செல்வியை மீட்க கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மத்திய, மாநில அரசுகளுக்கும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் தமிழ்செல்வி நேற்று தூத்துக்குடிக்கு திரும்பினார். குடும்பத்தினர் அவரை மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர்.  இதுகுறித்து தமிழ் செல்வி கூறியதாவது:– எனது தோழி ஒருவர் மூலமாக பட்டுக்கனி என்பவர் அறிமுகமானார். அவர் சென்னையை சேர்ந்த செல்வக்கனி என்பவர் மூலம் மலேசியாவில் அதிக சம்பளத்துடன் வேலை வாங்கி தருவதாக கூறினார். அதற்காக ரூ.40 ஆயிரம் பெற்றுக் கொண்டார். பின்னர் 2 பேரும் என்னை கொத்தடிமையாக சவுதி அரேபியாவுக்கு விற்றுவிட்டதாக கூறினர். தொடர்ந்து என்னை மிரட்டி அங்கு அனுப்பி வைத்தனர். 

சவுதி அரேபியாவில் ஒரு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் என்னை தினமும் 2 மணி நேரம் மட்டுமே தூங்க அனுமதித்தனர். ஒரு வேளை மட்டும் சாப்பாடு தந்தார்கள். இதனால் எனது உடல்நிலை பாதிக்கப்பட்டது. அந்த குடும்பத்தினரின் தொந்தரவு தாங்காமல் நான் தூக்கு போட்டு தற்கொலை முயற்சி செய்தேன். அப்போது அங்கு உள்ள போலீசார் விசாரித்தனர். அதன்பிறகு அந்த குடும்பத்தினர் என்னை ஊருக்கு அனுப்ப சம்மதித்தனர். அதே நேரத்தில் என்னை மீட்பதற்காக என் குடும்பத்தினர், மத்திய, மாநில அரசுகளிடம் முறையிட்டனர். 

மத்திய, மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வந்தது. அதன் பேரில் நாட்டுக்கு திரும்பி உள்ளேன். என்னை போன்ற பலர் அங்கு கொத்தடிமைகளாக தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களையும் அரசு மீட்க வேண்டும். என்னுடைய நிலைமை, வேறு எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது. நான் உயிருடன் திரும்புவேன் என்ற நம்பிக்கை இல்லாமல் இருந்தேன். என்னை மீட்பதற்கு நடவடிக்கை எடுத்த மத்திய, மாநில அரசுகளுக்கும், வக்கீல்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தமிழ்செல்வி கூறினார்.

0 comments

Leave a Reply