ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» arumuganeri » காணாமல் போகும் தாமிரபரணி...காணாமல் போகும் தாமிரபரணி...
------------------------------------------------
தலைப்பை எழுதுவதற்கே கை அதிர்கிறது. ஆனால், உண்மையில் ஒரு நதியைக்காலி செய்யும் முயற்சியில் அரசும், பன்னாட்டுக்கம்பெனிகளும் இறங்கும் போது, "கையறு நிலையில்" நிற்கும் மக்கள்...
தலைமுறை, தலைமுறையாய் ஆற்றோடு பிணைந்திருந்த மக்கள் இதன் பின்விளைவுகளை தெரிந்திருக்கிறார்களா என்பது சந்தேகமே.
பத்தாண்டுகளுக்கு முன்பு கோக் கம்பெனி கங்கைகொண்டானில் ஆலை அமைக்கும்போதே பல வழிகளில் எதிர்த்தோம். எழுத்தாளர் சங்கம் உட்பட பல அமைப்புகள் ஆர்ப்பாட்டங்கள்,மறியல் போராட்டங்கள் நடத்தின. மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் நடந்து, பலர் கைதாகி சிறை சென்றனர். ஆவணப்பட இயக்குனர் கதிர் " மூழ்கும் நதி" என்ற ஆவணப்படம் எடுத்தார். அதை வெளிவராமல் தடுக்க, ஆலை நிர்வாகமும், காவல் துறையும் முயற்சி செய்தன. அதையும் மீறி எழுத்தாளர் சங்கம் சார்பில் திரையிட்டோம். எல்லாமே, தாமிரபரணி நதியை எப்பாடுபட்டாவது காப்பாற்றவேண்டும் என்ற முயற்சியின் ஒரு பகுதி தான்.
வற்றாத ஜீவநதி தாமிரபரணி..இங்குள்ள மக்களுக்கு விவசாயத்திற்கும், குடி நீருக்கும் ஜீவாதாரமான நதி. நெல்லை மட்டும் அல்ல, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்களுக்கும் குடிநீருக்கு இதுவே ஆதாரம்.
திருநெல்வேலி அல்வாவிற்கு சுவை கூட்டுவதும் தாமிரபரணி தண்ணி தான். ஒரு நாளைக்கு 9 லட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சும் கோக் ஆலை..
இப்போது அதற்குத் துணையாக, பெப்சி கம்பெனியும் தாமிரபரணியை உறிஞ்ச வந்து விட்டது. ஒரு நாளைக்கு 15 லட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்பட இருக்கிறது. எல்லாத்தண்ணியும் பாட்டில்களுக்குள் போய் விட்டால், மக்கள் குடிக்க எங்கே போவது ? விவசாயம் எப்படி செழிப்பது ? தமிழ்நாட்டில் உருப்படியாய் இருக்கும் ஒரே ஆறு தாமிரபரணி ஆறு தான். அகத்திய மாமுனி கமண்டலத்தில் இருந்து கொட்டிப் பெருகிய ஆறு தாமிரபரணி என்று புராணம் சொல்கிறது. பெருகிய தண்ணீரை மீண்டும் புட்டிக்குள் அடைக்கும் வேலைகளை பன்னாட்டுக்கம்பெனிகள் செய்யத் துவங்கி விட்டன.
காலம் காலமாய், குறுக்குத்துறை முருகன் கோவில் படித்துறையில் குளித்து மகிழ்ந்த குடும்பங்கள் எத்தனை எத்தனை..
புதுமைப்பித்தனின் கதைகள் நெடுக வியாபித்து நிற்கும் வண்ணார்பேட்டை பேராச்சி அம்மன் கோவில் படித்துறைகள்..மீன்கள் துள்ளும் பாபநாசம் தலையணை...எல்லாமே கனவாய்ப் போய் விடுமோ என்ற அச்சம் மனதிற்குள் நிலைகொள்ள ஆரம்பித்து விட்டது.
தாமிரபரணியை கின்லே பாட்டிலில் மட்டுமே பார்க்கும் அடுத்த தலைமுறை உருவாகி விடும் அவலம் கண் முன்னே தெரிகிறது.
"நதியில் விளையாடி, கொடியில் தலை சீவி வளர்ந்த இளந்தென்றலே.." என்று பாடலில் உருகினால் மட்டும் போதுமா..நமது நதியைக் காப்பாற்ற வேண்டாமா ?
சற்றே காலதாமதம் என்றாலும், பல்வேறு கட்சிகள் இணைந்து நவம்பர் 16 இல் பெப்சிக்கு அனுமதி கொடுப்பதை எதிர்த்து நெல்லையில் முற்றுகைப் போராட்டம் நடத்த இருக்கின்றன.
நெல்லை மக்களே..வழக்கம் போல வேடிக்கை பார்க்காமல், நதி காக்கும் போராட்டத்தில் இணைந்து நின்று போராடுவோம்..!
முழு மூச்சுடன் போராடினால், நாம் அனைவருமே தாமிரபரணியைக் காப்பாற்றலாம் !

                                                                                                                                                                 நன்றி-ஆர்.நாறும்பூ நாதன்
Tags: arumuganeri

0 comments

Leave a Reply