ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » தூத்துக்குடி வட்டாரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது

தூத்துக்குடி வெள்ளத்தில் தத்தளிக்கிறது: 5 லட்சம் மக்கள் தவிப்பு
தமிழகத்தில் கடந்த மாத இறுதியில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. கன்னியாகுமரி கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தூத்துக்குடி நகரம் முழுவதும் வெள்ளக்காடாக உள்ளது.
தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள ஆதிபராசக்தி நகர், ஸ்டேட் பாங்க் காலனி, தனசேகர் நகர், முத்தம்மாள் காலனி, திரேஸ்புரம், லூர்தம்மாள்புரம், அத்திமரப்பட்டி, முத்தையாபுரம், ராஜீவ்நகர், முள்ளக்காடு, ஜெ.எஸ்.நகர், சுந்தர்நகர் உள்ளிட்ட பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
தனசேகர் நகர், முத்தம்மாள் காலனி ஆகிய பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தீயணைப்பு படையினர் நடவடிக்கை எடுத்தனர். அந்த பகுதியில் வெள்ளம் அதிகளவில் இருந்ததால் உள்ளே செல்ல முடியவில்லை.
இதையடுத்து பரிசல்களை வரவழைத்து அதில் சென்று வெள்ளத்தில் சிக்கியவர்களை தீயணைப்பு படையினர் மீட்டனர். கோரம்பள்ளம் குளம் நிரம்பிய நிலையில் குளத்திற்கு அதிகளவில் தண்ணீர் வரத்து உள்ளதால் உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்தோணியார் புரம் பகுதியில் சாலைகளை துண்டித்து தண்ணீரை வெளியேற்ற முயற்சி நடந்தது.
இதனால் நெல்லை– தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதே போல் தூத்துக்குடி– திருச்செந்தூர் பிரதான சாலையிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அங்கும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் தூத்துக்குடியில் இருந்து பொதுமக்கள் வெளியில் வர முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் அங்கிருந்து காட்டாற்று வெள்ளம் அதிகளவில் கோரம்பள்ளம் குளத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் குளத்தில் இருந்து வெளியேறும் அதிகளவு வெள்ளம் கோரம்பள்ளம் பஞ்சாயத்து பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்தது.
அந்தோணியார்புரம் பகுதியில் உள்ள பழைய டோல்கேட் அருகே சுமார் 10 அடி உயரத்திற்கு கட்டிடங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. உப்பாற்று ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளால் வெள்ளநீர் முழுமையாக கடலுக்குள் செல்ல முடியவில்லை. இதனால் மழை வெள்ளம் ஊருக்குள் புக தொடங்கியுள்ளது. நேற்று விடிய விடிய பெய்த மழையால் மேலும் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருகிறது.
இதனால் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்களை மீட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நெல்லையில் இருந்து ஏராளமான தீயணைப்பு படையினர் மீட்பு பணிக்காக தூத்துக்குடிக்கு சென்றுள்ளனர். ரப்பர் படகுகள் மூலம் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட சென்ற கலெக்டர் ரவிக்குமாரை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மீட்பு பணிகள் சரிவர செய்யப்படவில்லை என அவர்கள் கலெக்டரிடம் குறை கூறினர். மேலும் இதே நிலை நீடித்தால் உயிர்சேதம், பொருட்சேதம் அதிகரிக்கும் எனவும் உடனடியாக போர்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் கலெக்டரிடம் கூறினர்.
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் உள்ள கோரம்பள்ளம் பகுதியில் அதிக அளவு வெள்ளம் சூழ்ந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள அரசு அலுவலர் குடியிருப்பு, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகிய பகுதிகள் தண்ணீரில் மிதக்கிறது. இதே போல் அருகில் உள்ள ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்புக்கு உள்ளேயும் வெள்ளம் புகுந்துள்ளது. இங்கு சுமார் 5 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன.
தூத்துக்குடி முழுவதிலும் 5 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் மொட்டை மாடிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். வெள்ள நீர் வடியாமல் மேலும் அதிகரித்து வருவதால் சேதம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

0 comments

Leave a Reply