ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » காட்டாற்று வெள்ளம்- திணறியது தூத்துக்குடி: மாடிகளில் மக்கள் தஞ்சம்; படகுகள் மூலம் மீட்பு பணி

தூத்துக்குடியில் வெள்ள நிவாரணப்பணிகளை சிறப்பு கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த், மாவட்ட ஆட்சியர் ம.ரவிகுமார், மாவட்ட எஸ்.பி. அஸ்வின் கோட்னிஸ் ஆகியோர் பார்வையிட்டனர்.
தூத்துக்குடி புறநகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளத்தில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் படகுகள் மூலமும், கயிறு கட்டியும் மீட்கப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி- திருநெல்வேலி, தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பாலான இடங்களில் நேற்றுமுன்தினம் இரவு கனமழை பெய்தது. குறிப்பாக கடம்பூர், கயத்தாறு, கழுகுமலை, மணியாச்சி பகுதியில் பலத்த மழை பெய்தது. கொம்பாடி ஓடை, புதுக்கோட்டை ஓடை வழியாக காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து கோரம்பள்ளம் குளத்தை நோக்கி கரைபுரண்டு வந்தது.
காட்டாற்று வெள்ளம் வந்ததால் கோரம்பள்ளம் குளத்தின் 24 மதகுகளும் திறக்கப்பட்டு 30 ஆயிரம் கன அடிக்கு மேல் உபரிநீர் உப்பாற்று ஓடையில் திறந்துவிடப்பட்டது. இருப்பினும் காட்டாற்று ஓடையில் வெள்ளம் மிக அதிகமாக வந்ததால் புதுக்கோட்டை பாலம் பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி ஆர்ப்பரித்து பாய்ந்தது.
இதன் காரணமாக புதுக்கோட்டை, மறவன்மடம், திரவியபுரம், அந்தோணியார்புரம், சோரீஸ்புரம், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, சிட்கோ தொழில் பேட்டை, அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகம், கோரம்பள்ளம், பெரியநாயகிபுரம், ஸ்டெர்லைட் அலுவலர் குடியிருப்பு, திருவிக நகர், இந்திராநகர், கணேஷ் நகர், தபால் தந்தி காலனி, மடத்தூர் போன்ற பகுதிகள் தண்ணீரால் சூழப்பட்டன.
இந்த பகுதிகளில் இடுப்பளவை தாண்டி தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதனால் வீடுகளில் சிக்கியவர்கள் வெளியே வரமுடியாமல் தவித்தனர். வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மக்கள் அனைவரும் மாடிகளில் ஏறிக் கொண்டனர். மேலும், கிராமங்களில் உள்ள தேவாலயங்கள், சமூக நலக்கூடங்களில் தஞ்சம் புகுந்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், வேளாண்மை அலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால் உள்ளே யாரும் செல்ல முடியவில்லை. பணிக்கு வந்த அலுவலர்கள், ஊழியர்கள் வெளியே சாலையிலேயே திரண்டு நின்றனர். உள்ளே சிக்கியிருந்த சிலரை தீயணைப்பு படையினர் படகு மற்றும் கயிறு கட்டி மீட்டனர்.
இதனால் எந்த அலுவலகத்திலும் நேற்று பணிகள் நடைபெறவில்லை. பேரிடர் மேலாண்மை மையத்துக்கு கூட பணியாளர்கள் செல்ல முடியவில்லை. மழை அளவு விபரங்களை கூட தெரிந்து கொள்ள முடியவில்லை.

கோரம்பள்ளம் குளத்தில் இருந்து 30 ஆயிரம் கன அடிக்கு மேல் உபரிநீர் உப்பாற்று ஓடையில் திறந்து விடப்பட்டதால் கரையில் உள்ள அத்திமரப்பட்டி, காலாங்கரை, வீரநாயக்கன்தட்டு, முத்தையாபுரம், ஜேஎஸ் நகர், சுந்தர்நகர், முள்ளக்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் அனைத்தும் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கின. இதேபோல் தூத்துக்குடி மாநகரின் வடக்கு புறநகர் பகுதிகளான முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்திநகர், சங்கரப்பேரி போன்ற பகுதிகளும் வெள்ளத்தால் சூழப்பட்டு ள்ளன. தீயணைப்பு துறையினர், கடலோர காவல் படையினர், கடலோர பாதுகாப்பு குழும போலீஸார், வருவாய் துறையினர், காவல் துறையினர் படகுகள் மற்றும் கயிறுகள் கட்டி கட்டிடங்கள், வீடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.

தண்ணீர் அதிக வேகத்துடன் கரை புரண்டு ஓடியதால் ரப்பர் படகுகளில் சென்று கூட மக்களை மீட்க முடியவில்லை. அந்தோணியார்புரம் பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ராமராஜன் மற்றும் கடலோர காவல் படையை சேர்ந்த ஒருவரை வெள்ளம் அடித்துச் சென்றது. அவர்களை அங்கு நின்ற மீட்பு குழுவினர் போராடி மீட்டனர்.
இதேபோல் சோரீஸ்புரம் பகுதியில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு முட்செடியில் சிக்கியிருந்த கணேசன் (19) என்ற மாணவரை தீயணைப்பு படையினர் கயிறுக் கட்டி மீட்டனர். மேலும், சோரீஸ்புரம் பகுதியில் இருந்து காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ராஜா (14) என்ற மாணவரை சுமார் 200 மீட்டர் தாண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தீயணைப்பு படையினர் மீட்டனர். இதேபோல் மரங்கள், முட்செடிகளை பிடித்துக் கொண்டு போராடிய பலர் மீட்கப்பட்டனர்.

தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் 3-ம் மைல் மேம்பாலத்துக்கு அடியில், அந்தோணியார்புரம், திரவியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையை தாண்டி வெள்ளம் முழங்கால் அளவுக்கு மேல் கரைபுரண்டு ஓடியது. தூத்துக்குடி- திருநெல்வேலி இடையே காலை 9 மணி முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. திருநெல்வேலியில் இருந்து வந்த பஸ்களை முறப்பநாடு பகுதியிலேயே போலீஸார் தடுத்து நிறுத்தினர். ஒருசில பஸ்கள் மட்டும் புதுக்கோட்டை வரை வந்து சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.

தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் திருநெல்வேலியில் இருந்து சில பஸ்கள் குரும்பூர்- ஆறுமுகநேரி சென்று திருச்செந்தூர் சாலை வழியாக தூத்துக்குடிக்கு திருப்பிவிடப்பட்டன.
தூத்துக்குடி- திருச்செந்தூர் இடையே போக்குவரத்து பிற்பகல் வரை சீராக நடைபெற்றது. மாலையில் முள்ளக்காடு, சவேரியார்புரம் பகுதியில் சாலையை தாண்டி வெள்ளம் சென்றதால் அந்த வழியாகவும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் தூத்துக்குடி மாநகரம் தீவு போல மாறியது.

மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார் கூறும்போது, ‘கடம்பூர், கயத்தாறு, கழுகுமலை, திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த காட்டாற்று வெள்ளம் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. மழை குறைவு என்றாலும், குளங்கள் ஏற்கெனவே நிரம்பிவிட்டதால் அனைத்து வெள்ளமும் காட்டாற்று ஓடையில் வந்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரண பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உணவுகள் சப்ளை செய்யப்பட்டு வருகிறது’ என்றார் ஆட்சியர்.

0 comments

Leave a Reply