ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» நெல்லை » மழை பெய்தும் வள்ளியூர், ராதாபுரம் பகுதியில் நிரம்பாத குளங்கள் விவசாயிகள் கவலை

வடகிழக்குப் பருவமழையின் தீவிரத்தால், தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் வள்ளியூர், ராதாபுரம் பகுதியில் குளங்கள் நிரம்பாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
வடகிழக்குப் பருவமழையால் தமிழ்நாடு முழுவதும் பலத்த மழை பெய்தது. குறிப்பாக கடலோர மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றன.
திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தால், தினமும் 10 ஆயிரம் கனஅடி உபரிநீர் கடலில் வீணாக கலந்துள்ளது. ராதாபுரம் வட்டம், நம்பியாறு அணை நிரம்பி வழிந்து, தினமும் 200 கனஅடி தண்ணீர் வீணாக கடலில் சேர்ந்துள்ளது.
ஆனால் ராதாபுரம் வட்டத்தில் உள்ள வள்ளியூர், ராதாபுரம் பகுதியில் கொடுமுடி அணையின்கீழ் உள்ள 42 பாசனக் குளங்கள் உள்பட 70-க்கும் அதிகமான குளங்கள் நிரம்பவில்லை. இதனால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர். ராதாபுரம் வட்டத்தில் 1,320.9 ஏக்கர் பாசன பரப்பை உடையது வள்ளியூர் குளமாகும். இந்தக் குளத்துக்கு மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து வள்ளியூரான் கால்வாய் மூலம்தான் தண்ணீர் வருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கொடுமுடி அணை கட்டிய பின்னர் வள்ளியூர் குளத்துக்குத் தண்ணீர் வருவது தடைப்பட்டு விட்டது. இதனால் வள்ளியூர் பெரியகுளத்தை நம்பியுள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில், ராதாபுரம் வட்டத்தில் சராசரியாக 308 மி.மீ. மழை பெய்துள்ளது. இந்நிலையில், வள்ளியூர் பெரியகுளம் மற்றும் அதன்கீழ் உள்ள பண்டாரகுளம், கிழவனேரிகுளம், அச்சம்பாடுகுளம், கட்டனேரிகுளம், ராதாபுரம் பகுதியில் உள்ள வட்டகுளம், சீலாத்திகுளம், நெடுமங்குளம், பண்டாரபெருங்குளம், குமாரப்புதுக்குளம் உள்ளிட்ட 70-க்கும் அதிகமான குளங்கள் நிரம்பவில்லை.
இந்தக் குளங்களுக்கு தண்ணீர் வரும் கால்வாய்களை பொதுப்பணித் துறை அதிகாரிகள் பராமரிப்பு செய்யவில்லை என்பதுதான் விவசாயிகளின் முக்கிய குற்றச்சாட்டு. இதனால் குளங்களுக்கு வரக்கூடிய தண்ணீர் விரயமாகியுள்ளது.

0 comments

Leave a Reply