ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணியளவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவில் சுவாமி ஜெயந்திநாதர் தங்கரதத்தில் பவனி வந்தார். நாளை (செவ்வாய்க்கிழமை) சூரசம்ஹாரம் நடக்கிறது.
முருகப்பெருமானின் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 12ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் நடை திறக்கப்பட்டு, விசுவரூபம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், ஜெயந்திநாதர் யாகசாலை புறப்பாடு, உச்சிகால தீபாராதனை, சாயரட்சை தீபாராதனை நடைபெற்று வருகிறது.
அதேபோல் விழா நாட்களில் மாலையில், திருவாவடுதுறை ஆதினம் கந்தசஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளிதெய்வானைக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு அலங்காரம், தீபாராதனைக்கு பின்னர், சுவாமி ஜெயந்திநாதர் வள்ளிதெய்வானையுடன் தங்கரதத்தில் எழுந்தருளி கிரி வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
6ம் நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணியளவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமியும் அம்பாளும் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயா அபிஷேகம்(அதாவது கண்ணாடியில் தெரியும் சுவாமியின் பிம்பத்திற்கு அபிஷேகம்) நடக்கிறது.
7ம் திருநாளான நாளை மறுநாள் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, விசுவரூபம், உதய மார்த்தாண்ட அபிஷேகம் மற்ற காலங்கள் தொடர்ந்து நடக்கிறது. அதிகாலை 5 மணிக்கு தெய்வானை அம்பாள் தபசு காட்சிக்கு எழுந்தருள்கிறார். மாலை 6.30 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்று நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் இரவு சுவாமிக்கும், தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

0 comments

Leave a Reply