ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » அணை தூர்வாரும் பணியில் முறைகேடுகளைத் தடுக்கக் கோரி ஸ்ரீவைகுண்டத்தில் கடையடைப்பு, சாலை மறியல்


தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அணையைத் தூர்வாரும் பணியில் முறைகேடுகளைத் தடுக்க வலியுறுத்தி, திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, கூடங்குளம் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் உள்பட 221 பேர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
கோரிக்கை என்ன? பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி ஸ்ரீவைகுண்டம் அணையைத் தூர்வாரும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அணையின் முதல் பகுதியிலிருந்து தூர்வாரும் பணிகளைத் தொடங்க வேண்டும்; மணல்வாரிகள் என்றழைக்கப்படும் 18 மதகுகளை பராமரித்து கழிவுகளை மட்டும் அகற்ற வேண்டும்; தண்ணீரை சுத்திகரிக்கும் தன்மை கொண்ட மணலை அள்ளக் கூடாது; தூர்வாரும் பணிகளைக் கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டத்தில் ஆக. 31இல் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டம் நடைபெறும் என அணை தூர்வாரும் பணி மேம்பாட்டுக் குழுவினர் அறிவித்து இருந்தனர். இதுதொடர்பாக வட்டாட்சியர் அலுவலகத்தில் இருமுறை நடைபெற்ற சமாதானக் கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.
சாலை மறியல்: இதையடுத்து, அறிவித்தபடி ஸ்ரீவைகுண்டத்தில்  திங்கள்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. ஒருசில கடைகளைத் தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியில் திருநெல்வேலி- திருச்செந்தூர் பிரதான சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமையில் போராட்டக் குழுவினர் மறியலில் ஈடுபட்டனர். இதில், கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார், அணை தூர்வாரும் பணி மேம்பாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் ராஜா, உழவர் உழைப்பாளர்கள் சங்கத் தலைவர் மணிகண்டன், வியாபாரிகள் சங்கத் தலைவர் காளியப்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் அழகுமுத்து பாண்டியன், பாஜக மாவட்ட வழக்குரைஞர் அணி தலைவர் முத்துராமலிங்கம், இந்து மகாசபை தென்மண்டல பொறுப்பாளர் சுப்புராஜ், பாமக மாவட்டச் செயலர் லிங்கராஜ், தேமுதிக மாவட்ட துணைச் செயலர் முருகையாபாண்டியன், நாம் தமிழர் கட்சி மாவட்டத் தலைவர் ஜோபின், நுகர்வோர் பாதுகாப்புப் பேரவை மாவட்டப் பொறுப்பாளர் சுடலைமுத்து, ஸ்ரீவைகுண்டம் ஜமாத் தலைவர் ஜாபர், இந்து முன்னணி மாவட்டத் தலைவர் முருகேசன், காங்கிரஸ் வட்டார தலைவர் செந்தில்குமார், நாடாளும் மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் கார்த்திக், போராட்டக் குழு வழக்குரைஞர்கள் சங்கரன், தெய்வக் கண்ணன், ராமசுப்பு, கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
போராட்டக் குழுவினருடன் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் சுப்ரமணியன் பேசுகையில், அணையின் முதல் பிரிவில் உள்ள அமலைச் செடிகளை அகற்றும் பணி முதற்கட்டமாக தொடங்கப்பட்டுள்ளது என்றார். இருப்பினும், அணையின் முதல் பிரிவில் இருந்து பணிகளை முழுமையாகத் தொடங்க வேண்டும்; மணலை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்; அதுவரையில் போராட்டம் தொடரும் என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். அவர்களுடன் மாவட்ட எஸ்.பி. அஸ்வின் கோட்னிஸும் பேச்சு நடத்தினார். இதற்கிடையே, ஸ்ரீவைகுண்டம் பழைய பாலம், புதுப் பாலம் வழியாக வாகனங்களை போலீஸார் திருப்பிவிட்டதால், போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தொடர்ந்து மறியலில் ஈடுபட முயன்ற நல்லகண்ணு மற்றும் 89 பெண்கள் உள்பட 221 பேரை போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
Tags: Daily News

0 comments

Leave a Reply