ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-1 என டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.

பாராட்டுக்கள் இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-1 என டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.

இந்தியா - இலங்கை இடையிலான 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பு சிங்கள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் மழை பாதிப்புக்கிடையே முதல் இன்னிங்ஸில் இந்தியா 312 ரன்களும், இலங்கை 201 ரன்களும் எடுத்தன. இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 274 ரன்கள் எடுத்தது. இலங்கை அணிக்கு 386 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

4-ஆம் நாள் முடிவில் 67 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறிக் கொண்டிருந்தது. இன்று ஆட்டம் தொடங்கியபோது வழக்கம்போல இஷாந்த் சர்மா மிகுந்த உத்வேகத்துடன் பந்துவீசினார். 21-வது ஓவரில் அவர் மேத்யூஸின் விக்கெட்டை எடுத்திருக்கவேண்டும். ஆனால், அப்போது நோ பால் வீசியதால் கீப்பர் பிடித்த கேட்ச் பயனில்லாமல் போனது. ஆனால், அடுத்த ஓவரில் சில்வாவின் விக்கெட்டை வீழ்த்தினார் உமேஷ் யாதவ். 
இதன்பிறகு மேத்யூஸும் திரிமானேவும் தாக்குப் பிடித்து ஆடினார்கள். அஸ்வின் மீண்டும் பந்துவீச வந்தபோது திருப்புமுனை உண்டானது. 38-வது ஓவரில் திரிமானேவின் விக்கெட்டை வீழ்த்தி அணிக்குப் புத்துணர்ச்சி அளித்தார் அஸ்வின். 5-ம் நாள் உணவு இடைவேளையின்போது இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பிறகு 6-வது விக்கெட்டை எடுக்க இந்திய அணி மிகவும் தடுமாறியது. மிக கவனமாகவும் அதேசமயம் ரன்ரேட்டும் குறையாத வண்ணம் மிக அபாரமாக ஆடினார்கள் மேத்யூஸும் பெரேராவும். 8 பவுண்டரிகளுடன் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார் பெரேரா. 

அணியைக் காப்பாற்றும் உண்மையான தலைவனாக ஆடி வந்த மேத்யூஸ் 217 பந்துகளில் சதம் அடித்தார். பிரிக்கமுடியாதபடி ஆடிவந்த  இந்த ஜோடியைப் பிரித்தார் அஸ்வின். 70 ரன்களில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் பெரேரா. தேநீர் இடைவேளையின்போது இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணிக்கு 4 விக்கெட்டுகள் தேவை. இலங்கை அணிக்கு 137 ரன்கள் தேவை. மீதம் 36 ஓவர்கள் உள்ளன. இதில் மழையின் மிரட்டல் வேறு. இந்த டெஸ்டின் கடைசிப் பகுதி, மிகவும் பரபரப்பாக இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்தார்கள்.ஆனால் இடைவேளைக்குப் பிறகு வீசிய முதல் ஓவரிலேயே மேத்யூஸின் விக்கெட்டைக் கைப்பற்றினார் இஷாந்த் சர்மா. இதன் மூலம் அவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 200-வது விக்கெட்டை வீழ்த்தினார். பிறகு அஸ்வின் ஹெராத், பிரசாத் ஆகியோரின் விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்தினார். அதற்கடுத்த ஓவரில் பிரதீப்பின் விக்கெட்டை வீழ்த்தினார் மிஸ்ரா. இதனால் இலங்கை அணி 268 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இந்த வெற்றியின் மூலம், 22 வருடங்களுக்குப் பின்னர் இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி இந்திய அணி புதிய வரலாறு படைத்துள்ளது.
Tags: Daily News

0 comments

Leave a Reply