ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » உடன்குடியில் பள்ளி வாகனம் மோதி எல்.கே.ஜி மாணவி பரிதாப பலிஉடன்குடியில் பள்ளி வாகன சக்கரத்தில் சிக்கி எல்.கே.ஜி படிக்கும் சிறுமி பரிதாபமாக பலியானார். தனியார் பள்ளி வளாகத்திலேயே நடந்த இந்த கோர விபத்து பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகே உள்ள மருதூர்கரையை சேர்ந்தவர் பட்டாணிசெல்வன். இவரது மகள் நேகா (4). இவள் உடன்குடி பரமன்குறிச்சி சாலையில் உள்ள சல்மா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தாள். நேகா தினமும் பள்ளிக்கு சொந்தமான பஸ்சில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். அது போல் இன்று காலை அவள் பள்ளி பஸ்சில் பள்ளிக்கு சென்றாள். 

பள்ளி வளாகத்திற்குள் பஸ் சென்றதும் மாணவ, மாணவிகள் அனைவரும் இறங்கி, தங்களது வகுப்பறைகளுக்கு சென்றனர். நேகா பஸ்சில் இருந்து இறங்கி பஸ்சின் பின்புறம் நின்று கொண்டிருந்தாள். அப்போது பஸ் டிரைவர் பரமன்குறிச்சியை சேர்ந்த கர்ணன் என்பவர் திடீரென பஸ்சை பின்னோக்கி நகர்த்தினார். பின்னால் நேகா நிற்பதை கவனிக்காமல் அவர் பஸ்சை எடுத்தார். இதில் நேகா பஸ்சின் பின்புற சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தாள்.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த தகவல் அறிந்ததும் குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சிநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் நேகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பொதுமக்கள் மறியல்

இதனிடையே பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவி பலியான சம்பவத்தை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் பள்ளிக்கு திரண்டு சென்றனர். பள்ளி வளாகத்திற்குள் புகுந்த அவர்கள் ஆத்திரத்தில் பஸ்சின் முன் பக்க, பின் பக்க கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். மேலும் அங்கு நின்ற வேனின் கண்ணாடியை உடைத்தனர்.

பின்னர் பள்ளி முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறும் போது, பள்ளி மாணவர்கள் பஸ்சில் இருந்து இறங்கி சென்றதும், நேகா பின்புறத்தில் நின்றுள்ளாள். ஆனால் அவள் நிற்பதை பஸ் டிரைவர், நடத்துனர், பாதுகாவலர் யாரும் கவனிக்கவில்லை. அவர்களின் கவனக்குறைவு காரணமாகவே நேகா பஸ் சக்கரத்தில் சிக்கி இறந்துள்ளாள். எனவே இதற்கு காரணமான டிரைவர், நடத்துனர், பாதுகாவலர் மற்றும் பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்றனர்.

மேலும் பொதுமக்கள் பலர் தங்களது மோட்டார் சைக்கிள்களை சாலையில் நடுவே நிறுத்தி, பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு உயர் போலீஸ் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. இதனிடையே பஸ் டிரைவர் கர்ணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags: Daily News

0 comments

Leave a Reply