ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » நகைக்காக பெண் கொலை - அண்ணன், தம்பி கைதுஆறுமுகநேரியில் நடந்த பெண் கொலையில் அண்ணன்– தம்பி கைது செய்யப்பட்டனர். அவர்கள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி ஜெயின் நகர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுதர்சன் (78). இவருடைய மனைவி மீனாட்சி (72). இவர்களுக்கு குழந்தை கிடையாது. இவர்கள் தனியாக வசித்து வந்தனர். இவர்களுடன் மீனாட்சியின் அண்ணன் ராமசாமியும் (80) தங்கி இருந்தார். கடந்த 2–ந்தேதி மாலையில் சுதர்சன் வெளியே சென்று விட்டார். ராமசாமி வீட்டின் திண்ணையில் அமர்ந்து இருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர் குடிக்க தண்ணீர் கேட்பது போன்று மீனாட்சியிடம் பேச்சு கொடுத்தார். 

பின்னர் அவர் வீடுபுகுந்து மீனாட்சியின் கழுத்தை நெரித்து கொலை செய்து, அவர் அணிந்து இருந்த 3½ பவுன் தங்க நகைகளை பறித்து சென்றார். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் மீனாட்சி கொலை தொடர்பாக ஆறுமுகநேரி லட்சுமிமாநகரம் தெற்கு தெருவைச் சேர்ந்த ராமச்சந்திர ஆசாரி மகன்கள் முத்து லட்சுமணன் (47), மரகதம் (37) ஆகிய 2 பேரும் காயல்பட்டினம் வடபாகம் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயனிடம் சரண் அடைந்தனர். அவர்களை ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் ஒப்படைத்தார். அவர்கள் 2 பேரையும் ஆறுமுகநேரி போலீசார் கைது செய்தனர்.

கைதான மரகதம் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:  எங்களுடைய தந்தையின் காலத்தில் இருந்து சொந்தமாக நகை தொழிலகம் நடத்தி வந்தோம். பின்னர் நகை தொழிலில் போதிய வருமானம் கிடைக்காததால் நகை தொழிலகத்தை மூடி விட்டோம். பின்னர் அண்ணன் முத்து லட்சுமணன் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள ஒரு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை செய்தார். நான் சென்னையில் கார் டிரைவராக வேலை செய்து வருகிறேன். என்னுடைய தந்தைக்கும், சுதர்சனுக்கும் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நட்பு இருந்தது. பின்னர் என்னுடைய அண்ணன் முத்து லட்சுமணன், சுதர்சனின் குடும்பத்தினருக்கு தங்க நகைகள் செய்து கொடுத்து இருந்தார்.

இந்த நிலையில் எனக்கு போதிய வருமானம் கிடைக்காததால் குடும்பம் நடத்த கஷ்டப்பட்டேன். எனவே நான் குடும்பம் நடத்துவதற்காக அடிக்கடி என்னுடைய அண்ணனிடம் பணம் வாங்குவேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் குடும்பம் நடந்த பணம் தருமாறு என்னுடைய அண்ணனிடம் கேட்டேன். அப்போது வீட்டில் தனியாக வசிக்கும் சுதர்சனம்– மீனாட்சி தம்பதியினர் பற்றியும், மீனாட்சியிடம் தங்க சங்கிலி பறித்து குடும்ப செலவுக்கு வைத்து கொள்ளுமாறும் என்னுடைய அண்ணன் தெரிவித்தார்.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தேன். கடந்த 2–ந்தேதி மாலையில் சுதர்சன் வழக்கம்போல் நடைப்பயிற்சிக்கு வெளியே புறப்பட்டு சென்றார். இதுகுறித்து என்னுடைய அண்ணன் எனக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். உடனே நான் ஹெல்மெட் அணிந்து மீனாட்சியின் வீட்டுக்கு சென்று குடிக்க தண்ணீர் கேட்டேன். பின்னர் அவர் வீட்டுக்குள் சென்றதும் நைசாக அவரை பின்தொடர்ந்து சென்று, அவர் அணிந்து இருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றேன். அவர் சத்தம் போட முயன்றதால் அவரது வாயை பொத்தி கீழே தள்ளினேன். பின்னர் அவரது நெஞ்சில் மிதித்து தங்க சங்கிலி, வளையலை பறித்து சென்றேன்.

பின்னர் அந்த நகைகளை உடன்குடியில் உள்ள நகை பட்டறையில் வைத்து உருக்கி தங்க கட்டியாக வைத்து இருந்தேன். மீனாட்சி தனியாக இருந்ததை நோட்டமிட்டு கொலை செய்ததால், அவருக்கு நன்கு தெரிந்தவர்கள்தான் கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதனால் நானும், எனது அண்ணனும் போலீசாருக்கு பயந்து கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தோம். இவ்வாறு கைதான மரகதம் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளார்.
Tags: Daily News

0 comments

Leave a Reply