ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News , News » நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்

 தாமிரபரணி தவழ்ந்தோடும் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகரிக்கும் ஆழ்துளைக் கிணறு- நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்

தூத்துக்குடி மாவட்டத்தில் முதலீடு குறைவான அதிகம் சம்பாதித்துத் தரும் வணிக நோக்கத்துக்காக ஏராளமானோர் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து நீரை உறிஞ்சுவதால் நிலத்தடி நீர்மட்டம் அசுர வேகத்தில் குறைந்து வருகிறது.
தமிழகத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாகவும், இதனால் குடிநீர்த் தட்டுப்பாடு அபாயம் உள்ளதாகவும் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த காலங்களில் 100 அடியில் தண்ணீர் கிடைத்து வந்த நிலையில், தற்போது 300 அடிக்கு கீழ் சென்றால்தான் தண்ணீர் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லாதது ஒரு காரணமாக இருந்தாலும், ராட்சத ஆழ்துளைக் கிணறுகள் அதிக அளவில் அமைக்கப்பட்டு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தைப் பொருத்தவரை விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி புறநகர் பகுதிகள், புதூர், உடன்குடி, சாத்தான்குளம், கோவில்பட்டி, குரும்பூர், வாழவல்லான், உமரிக்காடு, சேர்வைக்காரன்மடம், முக்காணி போன்ற பகுதிகளில், வணிக நோக்கத்துக்காக கட்டுப்பாடின்றி நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் இப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் மீண்டும் சமநிலையை அடைய முடியாத நிலைக்குச் சென்றுவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
இதனால், கிணறுகள் வறண்டு போதல், நீர் ஆதார வளங்கள் குறைதல் ஆகியவற்றால் விவசாயத்துக்கு மட்டுமன்றி, குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என மத்திய நிலத்தடி நீர் அமைப்பினர் அண்மையில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தாமிரவருணி ஆற்றில் தண்ணீர் எடுக்க பெரிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், சிறிய அளவிலான தொழிற்சாலைகள் ஆற்றில் தண்ணீர் எடுப்பதில்லை. இதனால், அவர்கள் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் கிடைக்கும் தண்ணீரையே பெரிதும் நம்பியுள்ளனர்.
சில வணிக நிறுவனங்கள் நீர்நிலைப் பகுதிகளை ஒட்டியுள்ள நிலங்களை விலைக்கு வாங்கி, அதில் பல நூறு அடிக்கு ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சும் நிலை நீடித்து வருகிறது.
மேலும், மாவட்டம் முழுவதும் 50-க்கும் குறைவான ஆழ்துளைக் கிணறுகள் இருப்பதாகவே மாவட்ட நிர்வாகத்தின் பதிவேட்டில் கணக்கு உள்ளது. ஆனால், 500-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் எந்தவித அனுமதியுமின்றி செயல்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
சிலர் வீட்டு உபயோகத்துக்காக ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து, அதிலிருந்து தண்ணீர் விற்பனை செய்யும் நிலை நீடித்து வருகிறது.
ஆட்சியரின் முன்னனுமதியின்றி புதிய கிணறுகள் தோண்டுதல், மின் கருவிகளைப் பயன்படுத்தி நிலத்தடி நீரை உறிஞ்சும் அமைப்புகள் ஏற்படுத்துதல் கூடாது என விதிமுறை உள்ளது. இந்த விதிமுறைகளை மீறுவது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986, பிரிவு 15ன் கீழ் தண்டைக்குரிய குற்றம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தூத்துக்குடி புறநகர் பகுதிகளான சாயர்புரம், சேர்வைக்காரன்மடம், ஓட்டப்பிடாரம் போன்ற பகுதிகளில் சிலர் நிலத்தடி நீரை தொடர்ந்து உறிஞ்சி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் சோதனை நடத்தி முறைப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.
Tags: Daily News , News

0 comments

Leave a Reply