ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News , News » பெற்றோர் குழந்தைகளுக்காக டிவி பார்ப்பதை குறைக்க வேண்டும்: அப்துல் கலாம் அறிவுரை

 Image result for அப்துல் கலாம்


பெற்றோர் குழந்தைகளுக்காக டிவி பார்ப்பதை குறைக்க வேண்டும்: அப்துல் கலாம் அறிவுரை


குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பெற்றோர்கள் டி.வி பார்ப்பதை ஒரு மணி நேரம் குறைக்க வேண்டும் என்று முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 90 வது ஆண்டு நிறைவு விழாவில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், அரியலூர் சோழன்மாதேவியில் இயற்கை வேளாண்மை செய்து வரும் 3 ஆயிரம் விவசாயிகளை சந்தித்து பேசினேன். இயற்கை சார்ந்த முறையில் விவசாய பொருட்களை விளைவித்து, அதை மதிப்பு கூட்டி உலகத்தரத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது எனது கனவு. இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க நீங்களும் ஒத்துழைக்க வேண்டும்.

அரவக்குறிச்சியில் தனது ஆசிரியர் பெயரில் ஒருவர் பள்ளி தொடங்கியுள்ளார். இது போன்று ஆசிரியர் பெயரில் ஒருவர் பள்ளி தொடங்கி இருப்பதை நான் பார்த்தது இல்லை. அந்த பள்ளிக்கு சென்று வந்த நான் அதை நினைத்து பெருமை அடைகிறேன். இயற்கை விவசாயத்தை பெருக்கி, இல்லம் தோறும் இயற்கை உணவு உண்ணும் சூழலை ஏற்படுத்த வேண்டும். அதே போன்று, ஒவ்வொரு வீட்டிலும் பெற்றோர் ஒரு மணி நேரம் டி.வி பார்ப்பதை குறைத்து விட்டு அந்த நேரத்தில் தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து புத்தகத்தை படிக்க வேண்டும். அப்போது தான் நமது குழந்தைகள் அறிவு சார் குழந்தைகளாக வருவார்கள். அறிவு சார் சமூகத்தை உருவாக்க முடியும்.

நமது பகுதிகளில் உள்ள ஊருணிகளுக்கு உயிர் கொடுக்க வேண்டும். ஊருணிகளை தூர்வாரி தண்ணீரை தேக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிறு, குறு தொழில்களையும், தொழில் முனைவோரையும் இணையதளம், சமூக வலைதளம் மூலம் சாதாரண மக்களிடம் கொண்டு செல்வது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். வேளாண்மை, டெக்ஸ்டைல், பிளாஸ்டிக் உற்பத்தி, செங்கல், டைல்ஸ் உற்பத்தி, மீன் உணவு போன்றவற்றை மேம்படுத்த வேண்டும். மதுரை மல்லிகையை உலக அளவில் பிரபலப்படுத்த வேண்டும். "விஷன் இந்தியா 2020" என்ற திட்டத்தின் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10 சதவீதம் உயர்த்தப்படும்.

இதன் மூலம் வறுமையில் வாழும் 30 சதவீத மக்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைவர். தனிமனித கல்வி, நகர்ப்புற வளர்ச்சி மேன்மை அடையும். இந்த லட்சியங்களை அடைய மத்திய-மாநில அரசுகள் தேவையானவற்றை செய்ய வேண்டும். வறுமை முற்றிலும் ஒழிய கல்லாமை ஒழிக்கப்பட்டு சமுதாயத்தில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும்.

இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்களாக மாறினால் மட்டுமே ஏற்ற தாழ்வற்ற சிறந்த நாடாக இந்தியா மாறும். நீடித்த வளர்ச்சிக்கு தலைமைப்பண்பு மிகவும் அவசியம். எனவே, இளைஞர்கள் தலைமைப்பண்மை வளர்த்துக் கொள்ள வேண்டும். பொருளாதார, சமூக ரீதியான அனைத்து வளர்ச்சிக்கும் தொழில் வளர்ச்சி சங்கம் துணையாக இருக்கும் என்று நம்புகிறேன்என்று கூறினார்.

Tags: Daily News , News

0 comments

Leave a Reply