ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15-ந் தேதி இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்படும்

மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15-ந் தேதி "இளைஞர் எழுச்சி நாளாக" கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதேபோல் சுதந்திர தினத்தன்று அப்துல் கலாம் பெயரில் விருது வழங்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த நாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வந்தது. அப்துல் கலாம் இறுதிச் சடங்கு நடைபெற்ற பேக்கரும்பு கிராமத்தில் பிரதமர் மோடியிடம் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இந்த கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்திருந்தார்.


இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஞ்ஞானிகள், அறிஞர்கள், கவிஞர்கள், தத்துவ மேதைகள், ஈடு இணையில்லா தலைவர்கள் என பலரையும் இந்தியாவிற்கு தமிழன்னை வழங்கியுள்ளாள். அந்த வகையில் "இந்தியாவின் ஏவுகணை நாயகன்" என்றும், "அணுசக்தி நாயகன்" என்றும், "தலைசிறந்த விஞ்ஞானி" என்றும், "திருக்குறள் வழி நடந்தவர்" என்றும், "இளைஞர்களின் எழுச்சி நாயகன்" என்றும் போற்றப்படும் பன்முகத் தலைவர் "பாரத ரத்னா" டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் தமிழகம் பெற்றெடுத்த தலைமகன் ஆவார்.


ராமேஸ்வரத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம் கடின உழைப்பாலும், ஒருமுக சிந்தனையாலும், விடா முயற்சியாலும் சிறந்த விஞ்ஞானியாக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு மக்களாலும் போற்றப்படும் குடியரசுத் தலைவராகவும் விளங்கினார். குடியரசுத் தலைவராக இருந்த போதும் சரி, அதன் பின்னரும் சரி, அவரது சிந்தனை எப்பொழுதும் மாணாக்கர்கள், இளைஞர்கள் ஆகியோரைப் பற்றியே இருந்தது. 2020ம் ஆண்டுக்குள் இந்தியா ஒரு வல்லரசு ஆக வேண்டும் என்று கனவு கண்டவர் அப்துல் கலாம்.


மாணாக்கர்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோரால் தான் அந்தக் கனவை நனவாக்க முடியும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். இந்தியா வல்லரசாக உருவெடுக்க, மாணாக்கர்களிடையே தன்னம்பிக்கை மிகவும் அவசியம் என்பதால் தான் மாணாக்கர்களை, "கனவு காணுங்கள், அந்தக் கனவு உறக்கத்தில் வரும் கனவாக இருக்கக் கூடாது. உறக்கத்தை விரட்டும் கனவாக இருக்க வேண்டும்" என தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக எடுத்துக் கூறினார். "வெற்றி பெற வேண்டும் என்ற பதட்டமில்லாமல் இருப்பது தான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி" என வெற்றியின் ரகசியத்தை மாணாக்கர்களுக்கு போதித்தார்.


அப்துல் கலாம் ஆசிரியராக இருப்பதையே பெரிதும் விரும்பினார். இளைய தலைமுறையினரையும், மாணாக்கர்களையும் தனது பேச்சினாலும், கருத்துகளாலும் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் வாழ்வில் உன்னத நிலையை அடைவதற்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர்கள் சிறந்த பங்காற்றிடவும் உந்துசக்தியாக விளங்கினார். எனவே, ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த தினமான அக்டோபர் மாதம் 15-ம் நாள் "இளைஞர் எழுச்சி நாள்" என தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் கடைபிடிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


Tags: Daily News

0 comments

Leave a Reply