ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» » தூத்துக்குடி மாவட்டத்தில் தொடரும் மழை

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த தொடர் மழையினால் 25 வீடுகள் இடிந்தன.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணாக தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை முதல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருச்செந்தூர், காயல்பட்டினம், உடன்குடி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமையும் மழை பெய்தது. தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை சற்று குறைந்து காணப்பட்டது. பல இடங்களில் தேங்கியுள்ள மழைநீரால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

ஆறுமுகனேரி-காயல்பட்டினத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: ஆறுமுகனேரி மற்றும் காயல்பட்டினத்தில் நீடித்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. இப்பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை மழை கொட்டித் தீர்த்தது. இதனால், காயல்பட்டினம் நகராட்சி, ஆறுமுகனேரி பேரூராட்சி பகுதிகளில் தாழ்வான இடங்களை மழை நீர் குளம்போல் சூழ்ந்துள்ளது.

அந்த தண்ணீரை வடியச் செய்யும் முயற்சிகளில் எவ்விதப் பலனும் கிடைக்கவில்லை. ஊழியர்கள் பற்றாக்குறையாலும், மழை ஓயாததாலும் இந்நிலை பணிகள் தாமதமாகி வருவதாகக் கூறப்படுகிறது. காயல்பட்டினத்தில் புறநகர்ப் பகுதியில் காட்டாற்று வெள்ளம் போல் நீர் தேங்கியுள்ளது. வியாழக்கிழமை இரவு ஆறுமுகனேரியில் மட்டும் 16 வீடுகள் இடிந்திருந்தன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு ஆறுமுகனேரியில் 21 வீடுகளும், காயல் பட்டினத்தில் 4 வீடுகளும் இடிந்தன.

அதன் விவரம்: காயல்பட்டினத்தில் கோமான்புதூர், காட்டுதைக்காதெரு, குலாம் சாகிபு தம்பி தோட்டம் மற்றும் பூந்தோட்டம் ஆகியவற்றில் தலா ஒரு வீடு இடிந்தது.

ஆறுமுகனேரி பேரூராட்சியில் அடைக்கலாபுரத்தில் 4 வீடுகளும், கீழநவ்வலடிவிளை, பாரதி நகரில் தலா 2 வீடுகளும், பேயன்விளை, புதூர், காணியாளர் தெரு, சுப்பிரமணிய சுவாமி கோவில் தெரு, சண்முகபுரம் கீழத்தெரு, செல்வராஜபுரம், குத்துக்கல் சுவாமி கோவில் தெரு, காமராஜபுரம், ராணிமகராஜபுரம், வன்னிமாநகரம், வடக்கு சுப்பிரமணியபுரம், தெற்கு சுப்பிரமணியபுரம் ஆகிய இடங்களில் தலா ஒரு வீடும் இடிந்தன. அனைத்து வீட்டு உரிமையாளர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க வருவாய் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை 8 மணி வரை, 454 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் சராசரியாக 23 மி.மீ. பதிவானது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சாத்தான்குளத்தில் 67 மி.மீ. மழை பதிவானது. காயல்பட்டினத்தில் 63 மி.மீ., குலசேகரன்பட்டினத்தில் 55 மி.மீ, கடம்பூரில் 29 மி.மீ., ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம் பகுதியில் 28 மி.மீ., தூத்துக்குடியில் 24 மி.மீ., கீழஅரசடி, வைப்பாறு பகுதியில் 20 மி.மீ. மழை பதிவானது.

Courtesy : Dinamani News

Tags:

0 comments

Leave a Reply