ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » திருச்செந்தூர் கோயிலில் வைகாசி விசாகம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர்.

இக் கோயிலில், முருகப் பெருமானின் ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா, வசந்த விழாவாக இம் மாதம் 2ஆம் தேதி தொடங்கி, 10 நாள்கள் நடைபெற்றது. நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிறைவு நாளான புதன்கிழமை வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து, விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது.

பின்னர், சுவாமி ஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு வைகாசி விசாகத்தின் முக்கிய நிகழ்வான முனிக் குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து சுவாமி கிரிவீதி வலம் வந்து கோயில் சேர்ந்தார். இதையடுத்து திருவிழா நிறைவடைந்தது.

திருவிழாவையொட்டி, சில நாள்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் விரதமிருந்தும், பாதயாத்திரையாகவும் இங்கு வந்தனர். இதனால் புதன்கிழமை கோயில் வளாகம் பக்தர் கூட்டத்தால் நிரம்பிவழிந்தது. மேலும், பக்தர்கள் அதிகாலைமுதலே கடலில் புனித நீராடியதால் கடற்கரையிலும் மக்கள் வெள்ளம் காணப்பட்டது.

பக்தர்கள் காவடி- பால்குடம் எடுத்துவந்தும், அலகு குத்தியும், அங்கப் பிரதட்சிணம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கூட்ட நெரிசலால் கோயில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட இடங்களில், பக்தர்கள் தாங்களே தேங்காய் உடைத்து, பூஜை செய்து சுவாமியை வழிபட்டனர்.

பாதுகாப்புப் பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை உத்தரவின் பேரில், திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் செü. கோவிந்தராஜ், இன்ஸ்பெக்டர்கள் கோ. பத்மநாபபிள்ளை, சு. இந்திரா உள்ளிட்ட காவல் துறையினரும், தீயணைப்பு, ஊர்க்காவல் படையினரும் ஈடுபட்டனர்.

பக்தர்களுக்கு குடிநீர் வழங்குதல், வரிசையை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பணிகளில் தூத்துக்குடியைச் சேர்ந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தினர், அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தினர் ஈடுபட்டனர்.

பக்தர்கள் வசதிக்காக பல்வேறு வழித்தடங்களிலிருந்து கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

ஏற்பாடுகளை கோயில் தக்கார் ப.தா. கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் (பொறுப்பு) இரா. ஞானசேகர், அலுவலகக் கண்காணிப்பாளர் மூ. பாலு, கோயில் பணியாளர்கள் செய்தனர்.


Courtesy : Dinamani.com

Tags: Daily News

0 comments

Leave a Reply