ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளில் இந்த ஆண்டிற்கு பொருட்கள் வாங்குவதற்கு உள்தாள் பெற்று புதுப்பிக்கும் பணி இன்று துவங்கியது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளில் இந்த ஆண்டிற்கு பொருட்கள் வாங்குவதற்கு உள்தாள் பெற்று புதுப்பிக்கும் பணி இன்று துவங்கியது. போலி கார்டுகளை ஒழிக்க உள் தாளுக்கு நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்கள் இரண்டு மாதம் உள் தாளை பெற்றுக் கொள்ளலாம்.
ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுவதால் தமிழகத்தில் புதிய ரேஷன்கார்டுகள் வழங்கப்படாமல் மீண்டும் உள்தாள் புதுப்பிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 2013ம் ஆண்டிற்கு உள்தாள் புதுப்பிக்கும் பணியினை இன்று புத்தாண்டு துவக்கி பிப்ரவரி மாதம் வரை இரண்டு மாதங்களுக்கு ரேஷன்கார்டினை புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த முறையும் உள் தாள் வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு நம்பர் எதுவும் கொடுக்கப்படவில்லை. இந்த ஆண்டு தமிழக அரசு உணவு வழங்கல் துறை அதிகாரிகள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது போல் உள்தாள் வழங்கியதுடன், அதன் மூலம் போலி கார்டுகளை ஒழித்து கட்டவும் புதிய அதிரடி நடவடிக்கையை வெளியே தெரியாத அளவில் மிக ரகசியமாக மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான ரேஷன்கார்டுகள் அனைத்தும் அரிசி பெறக் கூடிய கார்டுகள் தான். இது தவிர அனைத்து ரேஷன்கார்டுகளை புதுப்பிக்கவும், உள்தாள் வழங்கவும் கலெக்டர் ஆஷீஷ்குமார் உத்தரவின் பேரில் மாவட்ட வழங்கல் அதிகாரி பஷீர் துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் உள்தாள் அனைத்தும் ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு இன்று உடனடியாக கார்டு புதுப்பிக்கும் பணியினை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.இந்த பணியினை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட ரேஷன்கடை பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு தாலுகாவில் உள்ள கடைகளில் உள்ள பணியாளர்களுக்கு டி.எஸ்.ஓ பஷீர் தலைமையில் நடந்தது. நேர்முக உதவியாளர் நாகராஜன், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் சுகுமாறன், நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் கிருஷ்ணன், பறக்கும்படை தாசில்தார் வீராச்சாமி, தூத்துக்குடி சிவில் சப்ளை தாசில்தார் வசந்தா உட்பட சிவில் சப்ளை தாசில்தார்கள் ரேஷன்கடை ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.உள்தாள் இணைக்கும் பணியின் போது விற்பனையாளர்கள் கவனிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து கலெக்டர் உத்தரவுப்படி டி.எஸ்.ஓ பஷீர் கூறியதாவது;
2012ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட ரேஷன்கார்டுகளின் பட்டியல் (சிட்டா) வழங்கப்படும் பட்டியலில் உள்ள ரேஷன்கார்டுகளின் அ எண் மற்றும் ரேஷன் கார்டு எண் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். 2012 ஆண்டு புதுப்பிக்கப்பட்ட ரேஷன்கார்டுகளின் எண்ணிகைக்கு ஏற்ப உள்தாள்கள் வழங்கப்பட்டுள்ளதா என்று சரிபார்த்து கொள்ள வேண்டும்.
உள்தாளில் இயந்திர எண் (மிஷின் நம்பர்) அச்சிடப்பட்டுள்ளதா, வரிசைக்கிரமமாக விடுபடாமல் உள்ளதா, அதில் எதுவும் சேதமுற்றுள்ளதா என்று சரிபார்க்க வேண்டும்.சிட்டா 2012ம் ஆண்டு வழங்கல் பதிவேட்டுடன் ஒப்பிட்டு ரத்து செய்யப்பட்ட ரேஷன்கார்டுகள் சிட்டாவில் இருந்தால் அதனை முதலில் சிட்டாவில் இருந்து கழித்து விட வேண்டும்.சுழற்சி முறையில் ரேஷன்கார்டுகள் புதுப்பிக்கப்படும் தேதி மற்றும் ரேஷன் அட்டை அ பதிவேடு எண் விபரத்தை பொதுமக்கள் நன்கு அறியும் வண்ணம் கடையின் முன்பாக விளம்பரப்படுத்த வேண்டும். பிரச்னை ஏற்படக் கூடிய அல்லது பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ள கடைகளில் போலீஸ் பாதுகாப்பு பெற ஏற்பாடு செய்ய வேண்டும்.
சிட்டா பட்டியலில் உள்ள வரிசைக்கிரமப்படி உள்தாள்கள் வழங்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட ரேஷன்கார்டில் தலைவர் அல்லது குடும்பத்தில் வயது வந்த உறுப்பினர் மட்டுமே கையெழுத்திட்டு உள்தாள் பெற்றுக் கொள்ள வேண்டும்.
உள்தாள் வழங்கும் நாளில் மண்ணெண்ணெய் தவிர இதர பொருட்கள் அனைத்தும் வழங்க வேண்டும். உள்தாள் வழங்கப்பட்ட ரேஷன்கார்டுகளுக்கு வார சனிக்கிழமைகளில் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும். உள்தாள் வழங்கப்பட்ட விபரத்திற்கு ரேஷன்கார்டு தாரரிடம் கையெழுத்து பெற வேண்டும்.
என்.ரேஷன்கார்டுகளுக்கு உள்தாள் வழங்க கூடாது. அவர்களுக்கு ஆன்லைன் மூலம் புதுப்பிக்கும் பணி நடக்கும். எந்த காரணம் கொண்டும் சிட்டா மற்றும் உள்தாள் ஆகியவற்றை நகல் எடுக்கக் கூடாது.
உள்தாள் வழங்கும் போது ரேஷன்கார்டுதாரர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். இந்த பணிக்காக எவ்வித கட்டணமும் பெறக்கூடாது. இந்த பணியினை நல்ல முறையில் மேற்கொண்டு தமிழக அரசுக்கு நற்பெயர் ஈட்டித்தர வேண்டும். உண்மையான, தகுதியான ரேஷன்கார்டுதாரர்கள் பயன்பெறவும் ஒத்துழைப்பு வழங்க ரேஷன்கடை பணியாளர்கள் முன்வரவேண்டும்.
இவ்வாறு அரசின் நடைமுறைகளை பஷீர் தெரிவித்தார்.

0 comments

Leave a Reply