ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Important Incidents » முக்கிய நிகழ்வுகள்


போராட்டத் துண்டுத்தாள் வழங்குதல்
போராட்டத்துக்குத் தூண்டுகோலாக இருந்த வீரவநல்லூர் வி.வீரபாகுவின் போர் திட்டம் நிறைந்த துண்டுத் தாள்களை வரதராஜீலு நாயுடு கே.டி.கோசல்ராம் காயல்பட்டினம் சம்சுதீன் வரிசை முகம்மது பி.எம்.கே. செய்யது முகம்மது உள்ளிட்ட பல இளைஞர்கள் இரயில்களில் மற்றும் சுவர்கள் உள்ளிட்ட பல இடங்களில் ஒட்டி தாலுகா முழுவதும் போராட்டச் சிந்தனையை பரவச் செய்தார்கள். 1940 அக்டோபாில் “பேச்சுசுதந்திரம் மக்களின் பிறப்புரிமை“ என்ற மந்திரச் சொல்லை வினோபாவே மக்கள் முன் வைத்தார்.

08.08.1942 இல் பம்பாயில் கூடிய அகில இந்திய காங்கிரசில் “வெள்ளையனே நாட்டை விட்டு வெளியேறு என்ற முழக்கம் மகாத்மாவால் எழுதப்பட்டது. மறுநாள் காந்திஜியும் பிற தலைவர்களால் கைது செய்யப்பட்டனர்.

முதல்கூட்டம்
1942 ஆகஸ்டு 9ஆம் தேதி அகில இந்திய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். கொதித்தெழுந்து ஆறுமகநேரி. ஆகஸ்டு 11ஆம் தேதி ஆறுமுகநேரி இந்து நடுநிலைப் பள்ளி முன் த.தங்கவேல் நாடார் தலைமையில் பிரமாண்டமான கூட்டம் கூடியது. எஸ்.ஏ.ராமசந்திரடோக்கோ பி.எஸ்.ராஜகோபாலன் எம்.எஸ்.செல்வராஜ் ஆகியோர் பம்பாய் தீர்மானம் பற்றி விளக்கினார்.
கோசல்ராம் அழைப்பு
நாம் நடத்த உள்ள போராட்டத்தின் மூலம் திருச்செந்தூர் தாலுகாவில் அரசு இயந்திரத்தை செயலிழக்கச் செய்ய வேண்டும். அது குறித்து ரகசியமாக கூடி முடிவெடுக்க 12 ஆம் தேதி காலை 8 மணிக்கு சந்தைக்கு முன்புள்ள அரசமரத்தடியில் (காந்தி மைதானம்) கூட வேண்டுமென்று கே.டி.கோசல்ராம் அழைப்பு விடுத்தார்.
உப்பு சத்தியாகிரகம்
ஆகஸ்ட் 12ஆம் தேதி மக்கள் சாரை சாரையாக வந்து கூடினர். அரசு அதிகாரிகளையும் ஊழியர்களையும் ராஜினாமா செய்யும்படி வற்புறுத்த வேண்டும். அரசு நிர்வாகத்தைச் செயலிழக்கச் செய்ய வேண்டும் என்றும் கே.டி.கோசல்ராம் ஆவேசமாகப் பேசினார். தலைவர்கள் கூடியிருந்த மக்கள் கூட்டம் உணர்ச்சிவசப்பட்டு எத்தகைய தியாகமும் செய்யத் தயார் என்று கூறி தலைவாகிளன் ஆணையை எதிர் நோக்கி நின்றன. ஆணைப் பிறப்பிக்கப்பட்டது. ஆறுமுகநேரி உப்புப் பாக்டாி அதிகாரிகளின் வீட்டை நோக்கிக் கூட்டம் எழுச்சியுடன் சென்றன.

அதிகாரிகளை ஒவ்வொருவராகப் பார்த்து ராஜினாமா செய் என்று கூட்டம் கோரியது. அதிகாரிகள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். உப்பளத்தில் சத்தியாகிரகம் தொடங்கியது. (சர்வே எண் 99 இல்) உப்புப்பாத்திகள் போடப்பட்டன அரசுத்துறை அலுசலகங்கள் அனைத்தும் மூடும்படி செய்யப்பட்டன. தாலுகாவில் நிர்வாகம் தடுமாறியது.

ஆறுமுகநேரியில் போலீஸ் ரெய்டு
ஆகஸ்டு 12இல் உப்புச் சத்தியாகிரகம் நடைபெற்றது. போராட்டத்தின் வேகம் பொதுமக்கள் அனைவரையும் போராளிகள் ஆக்கிவிடுமோ என்று அச்சமடைந்து மாவட்ட கலைக்டர் கெச்மாடியின் கவனம் ஆறுமுகநேரியின் பக்கம் திரும்பியது.

ஆகஸ்டு 15 இல் மாவட்ட கலெக்டர் கெச்மாடி சப்கலெக்டர் விண்டகாம்துரை இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் மாவட்ட மாஜிஸ்ட்டிரேட் இவர்களுடன் 9 லாரிகளில் ஆயதப்படையுடன் சிவன் கோயில் சந்தையில் முகாமிட்டனர். ஆறுமுகநேரி ஊர் சூறையாடப்பட்டது. விடுதலைப் போராட்ட வீரர்களின் குடும்பம் தெரு என நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுமார் ஆயிரம் பேருக்கு மேல் சந்தையில் கொடுமையான வெயிலில் ஆடுமாடு போல நிறுத்தி வைக்கப்பட்டனர். தாகத்திற்கு தண்ணீர் கொடுக்கப்படவில்லை. விசாரணைத் தொடங்கியது. ஆறுமுகநேரியின் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் தங்கநகைக் கடைக்காரர் த.தங்கவேல் நாடார் அழைத்து வரப்பட்டார்.” ஏன் இப்படி அரசுக்கு எதிராக வன்முறை செய்கிறீர்கள்“ என்றார் டி.எஸ்.பி ”காந்தி கூறிய அகிம்சாமுறையில் தான் போராடுகிறோம். என்றார் த.தங்கவேல். தபால் அலுவலகத்தைத் தகர்ப்பதும் உப்பு அதிகாரிகளைத் தாக்குவதும் அரசைக் கவிழ்க்கச் சதி செய்வதும் சாி என்பது கொள்கையா? என்று உறுமினார் டி.எஸ்.பி. “நாங்கள் இந்த இடத்தில் ஆயிரத்திற்கு மேல் உள்ளொம். நாங்கள் நினைத்தால் உங்களை அழித்து விட முடியும். அவ்வாறு செய்யாமல் இருப்பதே நாங்கள் காந்தியின் அகிம்சா வழியில் நடபவர்கள் என்பதை உணர்த்தும்” என்றார். நகரத் தலைவரைக் கைது செய்தால் குழப்பம் ஏற்படும் என்று கருதிச் சில தினங்களுக்குப் பின் கைது செய்ய உத்தரவிட்டனர். போராட்ட வீரர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களுள் 20 வயது நிரம்பிய இளைஞன் அஞ்சா நெஞ்சமுடன் தேசப்பற்றுடன் கோசமிட்டார் அவர்தான் எம்.எஸ். செல்வராஜன்.
கைது செய்யப்பட்டவுடன் எம்.எஸ்.செல்வராஜன் “மகாத்மா காந்திக்கே ஜே வந்தே மாதரம்” என்று கோஷமிட்டார். போலீஸார் அவரைக் கோஷம் போடாதே என்று ஒருவர் அடித்து மற்றவரிடம் தள்ள இப்படியாக அவர் மயங்கிவிழும் வரை அவரைக் கொடுமைப் படுத்தினார்கள். இத்தகைய மரண அடியை எவரும் பெற்றதில்லை.
நள்ளிரவு நேரத்தில் சிறைச்சாலையில் அவரது விரல்களை மடக்கி கட்டி நகக் கண்ணிகளில் ஊசி இறக்கினர். ஆராமத்தைப் பிடுங்கி செங்கல்லை முதுகில் வைத்து தண்ணீர் விட்டு சித்திரவதை செய்தனர்.

உயிர் அர்ப்பணிப்பு
நாட்டான் தங்கவேல் நாடார் என்பவரை மிருகத்தனமாக அடித்து சிறையில் அடைத்தனர். டி காரணமாக செத்து விடுவாரோ என நினைத்து அவரை சில தினங்களில் வெளியே விட்டு விட்டனர். ஆனால் அவருக்கு கடுமையான அடிபட்டதால் நெஞ்சில் ரத்தம் கட்டி மரணம் அடைந்தார்.
எங்கும் போராட்டம்
அடக்குமுறை அதிகமாக மக்களின் ஆவேச உணர்ச்சி கொந்தளித்து எழுந்தது. தாலுகா முழுவதும் போராட்டம் நடத்தப்படுவதற்காக என்று வெள்ளாளன் விளை காட்டில் மணல்தோியில் ஆகஸ்டு 17ஆம் தேதி இரவு 8 மணிக்குக் கூட வேண்டுமென்று கோசல்ராம் அழைப்பு விடுத்தார்.

அழைப்பை ஏற்று ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கூடினார்கள். கோசல்ராம் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது.

தாலுகா ஆபீஸ் கருவூலத்தை தாக்கத்திட்டம்
திருச்செந்தூரிலுள்ள தாலுகா ஆபீஸையும் கருவூலத்தையும் தகர்த்து எறிய வேண்டுமென ஏ.எஸ்.பெஞ்சமின் தீர்மானம் கொண்டு வந்தார் சுற்றிலும் மலபார் ஸ்பெஷல் போலீஸ் இருப்பதால் நமது திட்டம் தோல்வியுறும் என்றார் மங்களா பொன்னம்பலம். இத்திட்டம் கைவிடப்பட்டது.
ஆயதங்கள் வேண்டாமா?
போராட்டத்தில் தங்களைப் பாதுகாத்திட வெள்ளையரைத் தாக்கிடத் தேவையான ஆயுதங்களைக் சேகாிப்பது என்றும் தாலுகா முழுவதுமுள்ள தந்தி கம்பிகளை வெட்டிதுண்டிக்க வேண்டும் என்றும் குலசேகரப்பட்டணத்தில் உப்பள வேலை நடக்கவிடாமல் செய்ய வேண்டுமென்றும் ஒவ்வொரு கிராமத்திற்குள்ளும் நமது போராட்டத்தின் வேர்கள் ஊடுருவிச் செல்ல வேண்டும் என்றும் உருக்கமாக வீராவேசமாக வீர இளைஞன் கோசல்ராம் பேசினார்.

ஜி.இ.முத்து சித்தன்விளை ஆறுமுக நயினார் போன்றவர்கள் கோசல்ராம் கூறிய கருத்தை உடனே நிறைவேற்ற வேண்டுமென கூறினார்கள்.

கள்ளுக்கடை தீ வைத்தல்
அன்று முதல் தாலுகா முழுமையும் போராட்டம் பல்வேறு வடிவங்களில் எழுச்சி பெற்றது. நாதன் கிணறு பூச்சிக் காட்டில் முன்சீப்ர்களாக இருந்த நாராயண நாடார் சாமி நாடார் ஆகியோரின் தலமையில் சுந்தர லிங்கம் ஸ்ரீ.கந்தசாமி நாடார் உள்பட நூற்றுக்கணக்கான வீரர்கள் கள்ளுகடையை தீ வைத்துக் கொழுத்தினார்கள். கிராமத்தில் யாலும் கள் சாராயம் குடிக்கக் கூடாது எனக்கட்டுபாடு செய்யப்பட்டது. மீறியவர்கள் தலைமொட்டையடிக்கப்பட்டு கழுதைமேல் ஏற்றி ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டனர். கள்ளுக் குடித்தவர்கள் என்பதற்கு அடையாளமாக “க“ என்று தலையில் மொட்டையடிப்பார்கள். அவ்விதம் மொட்டையடித்த நாவிதர் சிவலிங்கம் என்பவரை அடித்து கைது செய்தது காவல்துறை.
காடுகளை அழித்தல்
அரசுக் காடுகள் அழிக்கப்பட்டன. கிராம முன்சீப் நாராயண நாடார் சுவாமி நாடார் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் கைது செய்யப்பட்டன. நாராயண நாடாரின் புதல்வர்கள் ஆறுமுகப் பாண்டியன் சிதம்பர பாண்டியன் இருவருக்கும் கசையடிகள் கொடுக்கப்பட்டன. நாதன்கிணறு போலீஸின் தாக்குதலுக்கு உள்ளானது.
குழும்பூர் இரயில்வே நிலையம் எரிப்பு
ஆகஸ்டு 18.ல் கோசல்ராம் தலைமையில் முகமூடி அணிந்த நூற்றுக்கணக்கான போராளிகள் குரும்பூர் ரயில் நிலையம் நோக்கிச் சென்றனர். இரண்டு போலீசார் துப்பாக்கி ஏந்தி நின்றனர். ஆயுதம் தேவை என்று வெள்ளாளன்விளைத் தோியில் கோசல்ராம் கூறியதை நிறைவேற்றும் முறையில் போலீசாரைக் கட்டிப் போட்டுவிட்டு இரண்டு துப்பாக்கிகளையும் முகமூடி வீரர்கள் பிடுங்கினார்கள். ஸ்டேசன் சூறையாடப்பட்டது. தீக்கிரையான ஸ்டேசனலிருந்த கதர் பண்டல் தனியாக பாதுகாத்திட எடுக்கப்பட்டது.

போராட்ட வீரர்களுக்குத் தோட்டாவுடன் இரண்டு துப்பாக்கிகள் கிடைத்தன. கோல்ராமின் மீது தீக்காயங்கள் ஏற்பட்டன. போலீஸ் கைது செய்து விசாரித்த போது கோயில் கொடை விழா தீப்பந்தம் பட்டதாகக் கூறினார்.

தந்திக் கம்பிகளே இல்லாத காட்சி
இத்தகைய தீவிர இயக்கம் பரவியது. குரங்கனி பி.துரைசுவாமி தலைமையில் ஏராளமான போராட்ட வீரர்கள் தந்திக் கம்பிகளையும் காடுகளையும் அழித்தனர்.

தென்திருப்பேரை கடையனேடை மூக்குப்போி பகுதிகளில் தந்திக் கம்பிகள் பயனற்றுப் போயின. தகவல் தொடர்பு முடக்கப்பட்டது.

மனித வேட்டையாடிய மனித மிருகங்கள்
இவ்வேளையில் அப்பாதரை என்ற டிபுடி சூப்பிரண்டும் சிவானந்தன் என்ற இன்ஸ்பெக்டரும் கிராமம் கிராமமாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் இவர்களுடைய குடும்பத்தினரையும் கைது செய்து துன்புறுத்தினர். தடியடி தாக்குதல் நடத்தப்பட்டது. வீடுகளை இடித்தும் நெல் அரிசி கருப்புக்கட்டியை மணலில் போட்டு மிதித்தும் சோற்றுப்பானைகளை உடைத்தும் அநியாயம் செய்தனர்.
புதுக்குடிச் சுனையில் இரவு 10 மணி
காவல்துறையின் இத்தகைய போக்கினைக் கண்டித்திட செப்டம்பர் 9ஆம் தேதி மேலப்புதுக்குடி சுனை அய்யனார் கோயில் முன்பு இரவு 10 மணிக்கு வீரர்கள் கூடினார்கள். புதுக்குடி கிராம மக்கள் பழமும் பச்சாிசிக் கஞ்சியும் துவையலும் பனை ஓலைப் பட்டையில் பாிமாறி உபசாித்தார்கள். எழுச்சிக் கூட்டமாகத் தொடங்கியது.
மரணப்படை
வெள்ளையர் ஆட்சியில் போலீஸ் கொடுமையை எதிர்த்திட வேண்டுமானால் நம்மில் பலர் வெள்ளையரை ஒழித்து விட்டு தற்கொலைக்கும் தயாராக இருக்க வேண்டும். உங்களில் இதற்கு எத்தனை பேர் தயார்? தயார் என்றால் ரத்தக் கையொப்பமிட்டுத் தரவேண்டும் என்று திரு.கோசல்ராம் வீர முழக்கமிட்டார்.
இரத்தக் கெயெழுத்து
கடையனேடை மகராஜன் ஆலந்தலை பெஞ்சமின் ஏரல் நடராஜன் செட்டியார் கொட்டங்காடு ஏ.டி. காசி மெய்யன்பரப்பு த.சிவந்திகனி பரமன்குறிச்சி நாகமணிவாதிரி செட்டியாபத்து அருணாசலம் வாழவல்லான் ரா.பச்சைப்பெருமாள் ஆகிய எட்டு பேர் எதற்கும் தயார் என்று ரத்த கையெழுத்து இட்டனர். தீவிரப்பணிகளை நிறைவேற்றும் முயற்ச்சிக்கு கர்ணம் வெள்ளக்கண் நாடார் வள்ளிவ்ளை வடிவேல் துரைராஜ் ஆகியோர் உதவிட முன் வந்தனர்.
அந்நியனுக்கு ஆதரவாகச் சாட்சி சொல்வதா?
போராட்டக்குழுவினர் பூச்சிக்காடு நோக்கிச் சென்றனர். கிராம முன்சீப் சாமி நாடாருக்கு எதிராக சாட்சி சொல்ல நினைத்தவரின் வீட்டைச்சுற்றி சூழ்ந்து கொண்டனர். ”சாட்சி சொல்ல மாட்டேன்” என்ற உறுதிமொழியைப் பெற்ற பின்பு திரும்பினார்கள்.
மெஞ்ஞானபுரம் தபால் ஆபீஸ் தாக்குதல்
16.09.1942இல் சாத்தான்குளம் நோக்கி ஒரு படையும் மெஞ்ஞானபுரம் நோக்கி மற்றொரு படையும் சென்றது. போஸ்ட் ஆபீஸ் தீ வைக்கப்பட்டது மெஞ்ஞானபுரம் போஸ்ட் ஆபீசைத் தாக்கியதாக ஆறுமுகநேரி த.ததங்கவேல் நாடாரை 1வது எதிரியாகவும் மற்றும் 8 பேர்கள் மீதும் வழக்கு போடப்பட்டது. வழக்கு முடிவடையும் 20 மாதம் வரையிலும் த.தங்கவேல் நாடாரும் மற்றவர்களும் சப்ஜெயில்களில் இருந்தனர். 20 மாதம் கழித்து பின்னர் வழக்கு வாபஸ் பெற்ப்பட்டது. வழக்கு வாபசானவுடன் ஜெயிலில் இருந்து வெளிவந்த த.ததங்கவேல் நாடாரை மீண்டும் கைது செய்து பாதுகாப்புக் கைதியாகத் தஞ்சாவூருக்குக் கொண்டுபோய் விட்டனர்.
சப்கலெக்டரைத் தாக்க முயற்சி
செப்டம்பார் 14இல் போராளிகள் பரமன்குறிச்சி போகும்பொழுது “வெள்ளை சப்கலெக்டர் ஒருவர் கார் பஞசராகி ரோட்டில் நின்று கொண்டிருக்கிறார்” என்று தகவல் கிடைத்தது. போலீஸ் அடக்குமுறைக்கும் அட்டூழியத்துக்கும் உத்தரவு போட்ட இந்த கலைக்டரை எப்படியும் மட்க்கிப் பிடிக்க வேண்டம் என்று தேடி ஓடினார்கள் எதிர்பாராதவிதமாக அடுத்து வந்த காரில் அந்த வெள்ளையன் ஏறித் தப்பி பிழைத்து விட்டான். 

வீரர்களுக்கு உணவளித்த பெருமை சித்தன்விளை பொிய நாடாரைச் சாரும். குரும்பூர் ரெயில் நிலையம் சதி வழக்கில் கோசல்ராம் கலெக்டர் ஹெச்மாடியால் கைது செய்யப்பட்டார். போராட்டம் தீவிரமடைந்தது.
பி.எஸ்.ராஜகோபாலன் தலைமை தாங்கினார். ஏ.டி.காசி தேவஇரக்கம் பூவலிங்கம் மந்திரம் ஆகிய இளைஞர்கள் போராட்டத்தில் தீவிரவாதத்துடன் ஈடுபட்டனர். 16 வயதுள்ள நாராயணன் என்ற சிறுவன் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

குலசை உப்பளத் தாக்குதல்
1942 செப்டம்பர் 19 ஆம் தேதி இரவு 12 மணிக்கு குலசேகரன்பட்டினம் பைப் லைனில் இராஜகோபால் தலமையில் கூட்டம் நடைபெற்றது. உப்பளத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி விளக்கினார். ஒரு போலீஸாருக்கு 3 நபர்கள் வீதம் நியமித்தார். 9 போலீஸ்காரர்களையும் கட்டி போட்டு விட்டு 9 துப்பாக்கிகள் தோட்டாக்களையும் எடுத்துக் கொண்டு புறப்படும் போது தீ வைக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இராஜகோபால் தலமையில் 52 பேர்கள் மந்திரம் தலமையில் 15 பேர்கள் சாியாக 3 மணிக்கு குழு செயல்பட்டது. உப்பள அலுவலக கதவை உடைத்துக் கொண்டு மந்திரம் குழு நுழைந்தது. போலீஸாரின் கைகள் கட்டப்பட்டன. திமிறியவர் கால் வெட்டப்பட்டது. சப்தம் கேட்ட லோன் துப்பாக்கியுடன் வந்தார். மந்திரம் இராஜகோபாலுக்கு தகவல் கொடுத்தார். இராஜகோபால் மந்திரம் காசிராஜன் இ.பி.தங்கவேல் ஆகியோர் மெயின் கேட் அருகே கல்தூண் மறைவில் நின்றனர். மந்திரம் அடித்த பேட்டாி லைட்டைக் கணக்கிட்டு லோன் சுட்டார். குறி தப்பியது. உடனே ராஜகோபால் லோனை நோக்கிச் சுட்டார். இக் குறியும் தவறியது. துப்பாக்கியால் உள்ள பைனட்டால் குத்துவதற்கு ஆயத்தமாகி வந்தார். மந்திரம் முன்பக்கமாக ஓடி திரும்பிய போது மார்பில் பைனட்டால் குத்த அதை தடுத்து திரும்பவே முதுகில் குத்தினார். மந்திரம் கீழே விழுந்தார். அவரை மிதித்தவாறு மார்பில் பைனட்டால் குத்தும் போது காசிராஜன் லோனின் கையை வெட்டினார். பைனட் மந்திரத்தின் சட்டையைத் துளைத்துக் கொண்டு பூமியில் நின்றது. லோனின் தலையிலும் மார்பிலும் வெட்டு விழுந்தது. இ.பி.தங்கவேல் வேல்கம்பால் வலதுபுறம் விலாவில் குத்தினார். லோன் சாய்ந்தார். வீரர்கள் தலைமறைவாயினர்.

இந்த படுகொலையை நடத்தியது யார் என்பதைக்கண்டு பிடிக்க இயலாததால் கிராம் மக்களைத் துன்புறுத்தினார்கள். மாணவர்கள்தான் முகமூடி அணிந்து இத்தனை போராட்டங்களை நடத்தியதாக எண்ணியது. காவல்துறை தாலுகா முழுவதும் பல கிராமங்கள் அதிகாரவர்க்க அரகர்களால் சூறையாடப்பட்டன.
கட்டபொம்மன்
பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான திக்கு விசய கட்டபொம்முவின் மகனான வீரபாண்டியக் கட்டபொம்மு நாயக்கரின் ஆட்சிக் காலம் 02.02.1790 முதல் 16.10.1799 ஆகும்.
இக்காலத்தில் திருச்செந்தூர் செந்திலாண்டவர் மீது பக்திக்கொண்ட கட்டபொம்மன் திருச்செந்தூரில் மதிய உச்சிகால வழிபாடு முடிந்தவுடன் உணவு அருந்தும் பழக்கத்தைக் கொண்டிரந்தார். இம்மணியோசையை அறிவதற்குத் திருச்செந்தூரிலிருந்து பாஞ்சாலங்குறிச்சி வரை மணிமண்டபங்களை அமைத்து தொடர்ச்சியாக ஒலி எழுப்பிடக் காவலர்களை நியமித்திருந்தார்.
அத்தகைய மணிமண்டபம் ஆறுமுகநேரியில் தற்போதுள்ள காமராஜ் பூங்காவின் கீழ்ப்புறம் அமைந்திருந்தது. வேல்வழிபாடு செய்வதற்கு வேல் மண்டபமும் சிவாலயமும் இருந்தன. இவ் ஆலயத்திற்கு மேற்ப்புறம் அழகிய தெப்பக்குளம் உள்ளது. கட்டபொம்மன் பங்குனி உத்திரத் திருநாளன்று திருச்செந்தூர் செல்லும் வேளை குதிரைகளுடன் இளைப்பாறிட ஆறுமுகநேரி மணிமண்டபத்தில் தங்கினான். அந்நேரம் இராமலெட்சுமி அம்மன் கோயில் சிறப்பு பூசையை முன்னிட்டு காயல்பட்டினம் கடற்கரைச் சென்று தீர்த்தமாடி விட்டு தூசிமாடசாமி அலங்காரமாக வீதிவலம் வருகின்றார். சாமியாடி தூசிமாடசாமியின் ஆயுதமான தொன்மையான வாளை வீசியவாறு அருளுடன் வந்து கொண்டிருந்தார்.
     இக்காட்சியை கண்ட கட்டபொம்மு ஏளனமாக “என்ன இச்சாமி துருப்பிடித்த சிறிய வானளச் சுற்றுகிறதே வலுமிக்க என்னுடைய வாளைச் சுற்றுமா?“ என்று தன் அமைச்சரிடம் கூற இதை உணர்ந்த தூசிமாடசாமி அருள்வரப் பெற்று ஆடிய சாமியாடி “சுழற்றிக் காட்டுகிறேன்“ என்றுக் கூறி கட்டபொம்மனின் வாளைப் பெற்று சுழன்று சுழன்று ஆடினார். சாமியைச் சோதித்ததற்கு மன்னிப்புக் கோரிய கட்டபொம்மு தம்முடைய வாளைச் சாமிக்கு வழங்கியதோடு இராமலெட்சுமி அம்மன் கோயிலுக்கு மகா மண்டபம் ஒன்றினைக் கட்டிக் கொடுத்தார்.
     தரையில் கற்றூண்களை நிறுத்தி அதில் கல் விட்டங்களைப் பொருத்தி அதன் மீது கல்கைகளை மாட்டி அதன் மீது மோட்டுவளைகளைக் கல்லாலேயே செய்து கட்டிடக் கலை நுட்பம் செறிந்த மண்டபமாக அதனைக் கட்டிக் கொடுத்துள்ளார். கட்டபொம்மு மண்டபம் சிறியதாக இருப்பினும் அதில் கையாண்டிருக்கும் தொழில் நுட்பம் போற்றுதலுக்குரியது.
     மண்டபத்தின் கூரையானது மரத்தாலான கைகளைப் போல் கல்லால் கைகளைச் செய்து காட்டியிருப்பது வேறெங்கும் காணயியலாத சிறப்பு ஆகும்.

0 comments

Leave a Reply