ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» District Temples » தூத்துக்குடி மாவட்ட கோயில்கள்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூரில் அலையாடும் வங்கக்கடல் ஓரத்தில் செந்தில் ஆண்டவராக முருகன் அருள்பாலிக்கிறார். சூரபத்மனை வீழ்த்தி பின்னர் ஆட்கொண்ட தரமான இங்கு நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து மட்டுமல்ல இலங்கை சிஙகப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் இருந்தும் சுமார் 10 லட்சம் பக்தர்கள் திரளுவார்கள். இந்த விழாவுக்கு அடுத்தபடியாக மாசித்திருவிழா வெகு விமாிசையாக நடைபெறும். இதையொட்டி நடைபெறும் தேரோட்டத்திலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இதுதவிர நாள் தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளனமான பக்தர்கள் இங்கு வந்து செல்கிறார்கள். இங்குள்ள 24 தீர்த்தங்களில் நீராடினால் சகல பாவங்களையும் போக்கிக் கொள்ளலாம் என்று வெற்றிமாலைக் கவிராயர் தனது “திருச்செந்தூர் தலபுராணத்தில் கூறியுள்ளார். தொடர்புக்கு 04639-242221 242270 242271
இணையதளம் : www.tetemple.org , www.tiruchendurmurugan.org இ.மெயில் : tcrtemple@sancharnet.in

குலசேகரன்பட்டினம்முத்தாரம்மன்கோவில்தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை அடுத்துள்ள குலசேகரன்பட்டினத்தில் அமைந்து உள்ள முத்தாரம்மன் கோவில் தமிழகத்தில் உள்ள புகழ் பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு நடக்கும் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா சிறப்பாக நடக்கின்றது. இவ்விழாவின் போது லட்சக்கணக்கான பக்தா்கள் திரளுவார்கள். தொடர்புக்கு 04639-250355.
காணவேண்டியநவதிருப்பதிகள்

நெல்லை - தூத்துக்குடி மாவட்டங்கள் சைவ-வைணவ கோவில்கள் நிறைந்த ஆன்மிக பூமியாகும். வைணவர்கள் புண்ணிய தலங்களாக கருதும் 108 திவ்விய தேசங்களில் தலைசிறந்து விளங்கும் நவ திருப்பதிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் இரு கரைகளிலும் அமைந்துள்ளது அவற்றை பற்றிக் காண்போம்.

ஸ்ரீவைகுண்டம் -சூரியன்
நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியாக விளங்குவது ஸ்ரீவைகுண்டம். இங்குள்ள மூலவர் பெருமாள் நின்ற கோலத்தில் வைகுண்ட நாதராக அருள்பாலிக்கிறார். உற்சவர்கள்ளபிரான். இந்த கோவில் நெல்லையில் இருந்து 28 கி.மீ தூரத்திலும் தூத்துக்குடியில் இருந்து 36 கி.மீ தூரத்திலும் உள்ளது.

திருவரகுணமங்கை(நத்தம்) - சந்திரன்
ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ளது திருவரகுணமங்கை என்னும் நத்தம் திருத்தலம். இங்குள்ள பெருமாள் விஜயாநன பெருமாள்.

திருப்புளியங்குடி - புதன்


நத்தத்தில் இருந்து 1/2 கி.மீ. தூரத்தில் உள்ளது திருப்புளியங்குடி. இங்குள்ள பெருமாள் காய்சினவேந்தன் என்று அழைக்கப்படுகிறார்.

பெருங்குளம் - சனி
திருப்புளியங்குடியில் இருந்து அதே சாலையில் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பெருங்குளம். இங்குள்ள மூலவர் வேங்கடவாணன் உற்சவர் மாயக்கூத்தர்.

தொலைவில்லிமங்கலம் (இரட்டைதிருப்பதிதெற்குகோவில்) - ராகு
பெருங்குளத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் மங்களகுறிச்சியில் இருந்து வலது புறமாக திரும்பி 2 கி.மீ மேற்கு நோக்கி வந்தால் இரட்டை திருப்பதி தலங்களை அடையலாம். இரட்டை திருப்பதியில் தெற்கு கோவிலில் மூலவர் தேவர்பிரான் உற்சவர் ஸ்ரீனிவாசன்.

வடக்குகோவில் (இரட்டைதிருப்பதி) - கேது
தெற்கு கோவிலில் இருந்து கண்ணுக்கு எட்டிய தூரத்தில் உள்ளது. வடக்கு கோவில் இங்குள்ள மூலவர் அரவிந்த லோசனர். உற்சவர் செந்தாமரைக் கண்ணன்.

தென்திருப்பேரை - சுக்கிரன்
நெல்லையில் இருந்து 38 கி.மீ. தொலைவில் நெல்லை - திருச்செந்தூர் ரோட்டில் உள்ளது. இங்குள்ள மூலவர் மகரநெடுங்குழைக்காதன் உற்சவர் நிகரில் முகில்வண்ணன்.

திருக்கோளுர் - செவ்வாய்
தென்திருப்பேரையில் இருந்து ஆழ்வார்திருநகாி செல்லும் வழியில் 3 கி.மீ. மேற்காக வந்து இடதுபுறம் செல்லும் ரோட்டில் 2 கி.மீ சென்றால் திருக்கோளுர் திருத்தலம் வரும். இங்குள்ள மூலவர் வைத்தமாநிதி பெருமாள். உற்சவர் நிச்சோபவிந்தன். இந்த தலம் மதுரகவி ஆழ்வார் அவதார தலமாகும்.

ஆழ்வார்திருநகரி (திருக்குருகூர்) - குருவியாழன்
ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் ஆழ்வார்திருநகரி அமைந்து உள்ளது. இங்குள்ள பெருமாள் ஆதிநாதன் என்று அழைக்கப்படுகிறார்.

நவகைலாயகோவில்கள்
நவகைலாயங்கள் எனப்படும் 9 சிவத்தலங்களும் நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில்தான் உள்ளது. அவை வருமாறு :-

பாபநாசம் - சூரியன்


நவகைலாயங்களில் முதல் கைலாயமாக திகழ்வது பாபநாசம் பாவநாசநாதர் கோவில். நெல்லையில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள மூலவர் ருத்திராட்சத்தினால் ஆனவர். அம்பாள் உலகாம்பிகை.

சேரன்மாதேவி - சந்திரன்
2வது கைலாயமாக திகழ்வது சேரன்மாதேவி அம்மநாத சுவாமி கோவில். இந்த கோவில் நெல்லையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. அம்பாள் ஆவுடைநாயகி.

கோடகநல்லூர் - செவ்வாய்
இந்த தலம் 3-வது கைலாயமாக விளங்குகிறது. இங்குள்ள இறைவன் பெயர் கைலாச நாதர். இறைவி பெயர் சிவகாமி அம்பாள். இந்த கோவில் நெல்லையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. சேரன்மாதேவி ரோட்டில் நடுக்கல்லூர் என்ற ஊாில் இருந்து தெற்கே ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது.

குன்னத்தூர் - ராகு
நவகைலாயங்களில் 4-வது தலமாக திகழ்வது குன்னத்தூர் கோதபரமேசுவரர் கோவில் இந்த கோவில் நெல்லை பேட்டையில் இருந்து மேல திருவேங்கடநாதபுரம் செல்லும் வழியில் உள்ளது. இங்குள்ள அன்னை சிவகாமி அம்பாள் என்றழைக்கப்படுகிறாள். (இந்த 4 தலங்களும் நெல்லை மாவட்டத்தில் உள்ளது)

முறப்பநாடு - குரு (வியாழன்)
5-வது தலம் முறப்பநாடு கைலாசநாதர் கோவில். நெல்லையில் இருந்து 17 கி.மீ. தொலைவில் தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ளது. நெல்லையில் இருந்து வல்லநாடு கொங்கராயகுறிச்சி கலியாவூர் உழக்குடி பூவாணி ஆழ்வார் கற்குளம் செல்லும் டவுன் பஸ்கள் இங்கு செல்லும். இது தவிர பாளை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் பஸ்கள் முறப்பநாட்டில் நின்று செல்லும்.

ஸ்ரீவைகுண்டம் - சனி
நவகைலாயங்களில் 6-வது தலம் ஸ்ரீவைகுண்டம் கைலாயநாதர் கோவில். இது பூலோக கைலாயம் என்று அழைக்கப்படுகிறது. நெல்லையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குள்ள அம்பாள் சிவகாமி அம்மை. இது குமர குருபர சுவாமிகள் அவதரித்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்திருப்பேரை - புதன்
இந்த தலங்களில் 7-வதாக இடம் பெறுவது தென்திருப்பேரை கைலாயநாதர் கோவில். இங்கு சுவாமி சிவகாமி அம்பாளுடன் அருள்பாலிக்கிறார். அம்பாளுக்கு அழகிய பொன்னம்மாள் என்ற திருப்பெயரும் உண்டு. இக்கோவில் நெல்லையில் இருந்து 38 கி.மீ. தொலைவில் உள்ளது.

ராஜபதி - கேது
நவகைலாயங்களில் 8-வது கைலாயமாக திகழ்வது ராஜபதி தலம் ஆகும். இக்கோவில் இயற்கை சீற்றத்தால் அழிந்துவிட்டது. முன்பு கோவில் இருந்த இடத்தில் அடையாளமாக ஒரு கல் மட்டுமே உள்ளது. அதையே தற்போது பக்தர்கள் வணங்குகிறார்கள் தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையை அடுத்த மணத்தி கிராமத்தில் இருந்து ஒரு கி.மீ தொலைவில் வடக்கே அமைந்து உள்ளது. இக்கோவிலில் இருந்ததாக கூறப்படும் நந்தி தற்போது ஓட்டப்பிடாரம் உலகம்மன் கோவிலில் உள்ளது.

சேர்ந்தபூமங்கலம் - சுக்கிரன்
இந்த திருத்தலங்களில் 9-வது கைலாயமாக திகழ்வது சேர்ந்தபூமங்கலம் கைலாயநாதர் கோவில். இங்குள்ள அம்பாள் சிவகாமி அம்மை. இந்த தலத்தின்தான் தாமிரபரணி ஆறு கடலில் சங்கமிக்கிறது. நெல்லையில் இருந்து புன்னக்காயல் செல்லும் வழியில் இவ்வூர் உள்ளது. இந்த நவ தலங்களில் வழிபட்டால் நவக்கிரக தோஷம் நீங்கி அவைகளின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கோவில்


திறப்பு நேரம்காலை


மாலை


பாபநாசம்

6.30 மணி முதல் 12 மணி வரை

5 மணி முதல் இரவு 7 மணி வரை


சேரன்மாதேவி

9 மணி முதல் 10 மணி வரை

4 மணி முதல் மாலை 5 மணி வரை


கோடகநல்லூர்

9 மணி முதல் 10 மணி வரை

5 மணி முதல் இரவு 7 மணி வரை


குன்னத்தூர்

7 மணி முதல் 8 மணி வரை

5 மணி முதல் மாலை 6 மணி வரை


முறப்பநாடு

7 மணி முதல் 9 மணி வரை

5 மணி முதல் இரவு 7 மணி வரை


ஸ்ரீவைகுண்டம்

6 மணி முதல் 10 மணி வரை

4 மணி முதல் இரவு 8 மணி வரை


தென்திருப்பேரை

7 மணி முதல் 9 மணி வரை

5 மணி முதல் மாலை 6 மணி வரை


சேர்ந்தபூமங்கலம்

7மணிமுதல் 9 மணி வரை

5 மணி முதல் மாலை 6.30 மணி வரைஉவரிசுயம்புலிங்க சுவாமி

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே வங்கக்கடல் ஓரம் இயற்கை எழில் சூழ அமைந்ததுதான் உரி கிராமம். இங்குள்ள கடற்கரையில் கடம்ப கொடிகளுக்கு இடையே சுயம்புவாய் தோன்றி இப்பூவுலக மக்களின் பிணி போக்கி அருள் செய்து கொண்டு இருக்கிறார் சுயம்புலிங்க சுவாமி.
இயற்கையில் எழில் வாய்ந்த உவரி கிராமம் முன்பு கீழுர் மேலூர் என்று இரு பகுதிகளாக இருந்தது. இவ்விரு பகுதிகளையும் ஒற்றையடி பாதையே இருந்தது. இதன் வழியாகதான் யாதவர் குல பெண்கள் பால் தயிர் கொண்டு செல்வார்கள். அவ்வாறு அவர்கள் செல்லும்போது அவ்வழியில் கிடந்த கடம்பக்கொடிகளில் ஒருவரது கால் தினமும் இடறி பால் தயிர் ஆகியவை பானையோடு தரையில் விழுந்து கொட்டிக் கொண்டே இருந்தது. தினமும் அந்த குறிப்பிட்ட இடத்திலேயே பானைகள் விழுந்து பால் கொட்டும் சம்பவம் வாடிக்கையாக இருந்து வந்தது. தினமும் இவ்வாறு நடந்ததால் வருமன அந்த பெண்ணுக்கு வருமானம் குறைந்தது. இதனால் அவளது கணவன் ஆத்திரமடைந்து நடந்ததை கேட்டான். அந்த பெண்ணும் உள்ளதை உள்ளபடியே கணவனிடம் கூறினாள். இதைக்கேட்ட இவளது கணவன் குறிப்பிட்ட அந்த இடத்துக்கு சென்று அங்கிருந்த கடம்பப்கொடியை கோடாரியால் வேரோடு வெட்டினான். அப்போது அந்த கடம்பக்கொடியின் அடிப்பகுதியில் அடிப்பகுதியில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவன் செய்வதறியாது திகைத்து நின்றான். இதற்கிடையே இந்த சம்பவம் காட்டு தீ போல் ஊருக்குள் பரவியதால் ஊர் பெரியவர்களும் அங்கு வந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு பெரியவருக்கு சுவாமியின் இருள் கிடைத்து அவர் மூலமாக இங்கு சிவபெருமாள் சுயம்புவாக தோன்றி இருப்பதும் ரத்தம் வடியும் இடத்தில் சந்தனத்தை பூசினால் ரத்தம் வழிவது நின்றுவிடும் என்ற அருள்வாக்கு கிடைத்தது.


அடி முடி அறியா ஓங்கி உயர்ந்த சிவபெருமான் நம் ஊரில் தாமாகவே தோன்றியுள்ளான் என்ற விபரம் அறிந்த ஊர் மக்கள் ஆனந்த வெள்ளத்தில் பக்தி பரவசமடைந்தனர். இதையடுத்து வெட்டுண்ட இடதத்தில் சந்தனத்தை தடவ என்ன ஆச்சரியம் ரத்தம் வழிவது உடனடியாக நின்று விட்டது. அன்று முதல் இன்றுவரை சுவாமிக்கு தினமும் சந்தன காப்பு இடப்படுபிறது. மறுநாள் அபிஷேகத்துக்கு முன்பு அந்த சந்தன காப்பு பிரிக்கப்பட்டும் அந்த சந்தணமே அருமருந்தாக பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது பல்வேறு மருத்தவ குணங்கள் நிறைந்தது என்று கூறப்படுகிறது.


இங்குள்ள சுவாமியை இதய சுத்தியுடன் நம்பிக்கையுடன் வழிபட்டால் கேட்வருக்கு கேட்ட வரமும் தீரா பிணி கொண்டவருக்கு பிணி தீர்த்தும் அருள் பாலித்து வருகிறார் சுயம்பு லிங்கசாமி. இந்த கலியுகத்தில் இப்படியும் நடக்குமா? என்று எண்ணத் தோன்றுகிறதா? ஆம் இன்றும் உவரி கோவிலில் நோய் முற்றியவர்கள் 41 நாட்கள் தங்கியிருந்து நலம்பெற்று திரும்புவதை காணலாம். இக்கோவிலின் சிறப்புகளை அறிந்து நெல்லை தூத்துக்குடி குமரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தினந்தோறும் வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இங்கு வரும் பக்தர்கள் கடல் மண்ணை கடல் நீர் சொட்ட சொட்ட சுமந்து வந்து கடற்கரையில் குவித்து வைக்கும் நேர்ச்சைகளைச் செய்வது வேறு எங்கும் காண முடியாது. மார்கழி மாதம் 30 நாட்களும் சூரிய ஒளி சுவாமி மீது தினமும் படும் சிறப்பும் இக்கோவிலுக்கு உண்டு.


இந்த கோவிலில் உயர்ந்த வாயிலைக் கொண்ட கல் மண்டப சுற்றுபிரகாரத்துடன் கூடியது. கோவிலின் உள்ளே சென்றதும் ஓங்கி உயர்ந்து இருக்கும் கொடிமரத்தை தரிசிக்கலாம். அதையடுத்து பலி பீடம் தொடர்ந்து மூலவர்க்கு முன் நந்தியும் உள்ளது.


உள்ளே சுயம்புவாக எழுந்தருளியுள்ள சுவாமி சுயம்புவாக எழுந்தருளியுள்ள சுவாமி ஐந்துதலை நாகம் குடைப்பிடிக்க அதன் கீழ் சிறிய லிங்கமாக இருக்கிறார். மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது என்பதை உணர்த்தும் விதமாக இறைவன் இங்கு காட்சி அளிக்கிறார்.
பிரம்மசக்திஅம்மன்

தந்தையுடன் தாயும் இருப்பதுதான் சிறந்தது. அதுபோல் இங்கு தாயாக இருந்து பக்தர்களை காப்பவள் பிரம்மசக்தி அம்மன். இந்த அம்மனுக்கு தனி கோவில் உள்ளது. மேலும் சுயம்புலிங்க சுவாமி கோவில் வளாகத்தில் வினாயகர் மற்றும் பிற பரிவார தேவதைகளும் உள்ளனர். கோவிலின் உற்சவ மூர்த்தி சுப்பிமணியர் இக்கோவிலின் தல விருட்சம் கடம்பக்கொடி.

பனிமய மாதாஆலயம்

தூத்துக்குடி நகரில் பீச்ரோட்டில் அமைந்து உள்ளது பனிமயமாதா ஆலயம். இந்த கோவிலில் உள்ள சொரூபம் கடந்த 1555-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9-ம் தேதி சந்தலேனா என்ற கப்பலில் இலங்கை காலே துறைமுகம் வழியாக தூத்துக்குடி வந்தடைந்தது. உலகின் முதன்மை அதிபேராலயமான மேரி மேஜருடன் 1960-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி புனித மரியன்னை ஆலயம் வணக்கம் மிகு ஆலய்ங்களுள் ஒன்றாக அருளப்பரால் இணைத்துக் கொள்ளப்பட்டது. இந்த ஆலயம் 1982-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி திருதந்தை 2-ம் அருள் சின்னப்பரால் உயர்த்தப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்டது. 1983-ம் ஆண்டு மரியன்னை திருத்தலம் பசிலிக்கா பேராலயமாக திருநிலைப்படுத்தப்பட்டது.

சின்னஜெருசலேம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்டசெந்தூரில் இருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் வங்காள விரிகுடா கடற்கரையோரம் மணப்பாடு கிராமத்தில் திருச்சிலுவை ஆலயம் அமைந்துள்ளது புகழ் பெற்ற ரோமன் கத்தோலிக்கக்கிறிஸ்துவ ஆலயங்களில் ஒன்று. மிகப்பழமையான இந்த ஆலயத்தில்வைக்கப்பட்டு உள்ள சிலுவை ஜெருசலேமில் இருந்து கொண்டு வரப்பட்டதாகும். எனவே இது சின்ன ஜெருசலேம் என்றே அழைக்கப்படுகிறது.


கிறிஸ்தவர்களின் புனிதத் தலமாக விளங்கும் இங்கு புனித சவேரியார் வருகை புரிந்துள்ளார். இது தவிர மூக்குபீறி தூய மார்க்கு ஆலயம் சாத்தான்குளம் அருகே சொக்கன்குடியிருப்பில் உள்ள மணல்மாதா ஆலயம் மெஞ்ஞானபுரத்தில் உள்ள பரிசுத்த பவுலின் ஆலயம் புளியம்பட்டியில் உள்ள அந்தோணியார் ஆலயம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள சந்தியாகு அப்பர் ஆலயம் சாயர்புரத்தில் உள்ள தூய திருத்துவ ஆலயம் திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டணத்தில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம் கோவில்பட்டி காமநாயக்கன்பட்டி விண்ணேற்பமாதா ஆலயம் ஆகியவை கிறிஸ்தவர்களின் முக்கிய ஆலயங்களாகும்.

இங்கு நடைபெறும் திருவிழாக்களில் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள். அதிலும் தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம், புளியம்பட்டி அந்தோணியார் ஆலயங்களுக்கு பிற மதத்தவரும் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.


உவரிஅந்தோணியார்ஆலயம்

நெல்லை மாவட்டம் உவரி கடற்கரையில் கோவா மிஷனாிகளால் 1903 - ம் ஆண்டு கட்டப்பட்டது கப்பல் மாதா ஆலயம் அன்றைய காலகட்டத்தில் பள்ளிக் கூடமாகவும் இருந்தது. பழைய ஆலயம் பழுதடைந்ததால் 1970-ம் ஆண்டு பாதர் தாமஸ் என்பவரால் புதிய ஆலயத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 1974-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. புதிய ஆலயம் கப்பல் வடிவில் கட்டப்பட்டதால் இதனை கப்பல் மாதா ஆலயம் என்றே மக்கள் அழைக்கிறார்கள். மேலும் உவரியில் உள்ள அந்தோணியார் ஆலயமும் மிகவும் பிரசித்தி பெற்றது.

நாசரேத்கதீட்ரல்ஆராதனைநேரங்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாசரேத் கதீட்ரல் மிகவும் புகழ்பெற்றது. தினசரி காலை 7 மணிக்கு திருவிருந்து ஆராதனை. தினசரி மாலை 6.30 மணிக்கு இரவு ஆராதனை. ஞாயிறு 9 மணிக்கு விசேஷ ஞாயிறு ஆராதனை. மாதத்தில் முதல் ஞாயிறு அதிகாலை 5 மணிக்கு விஷேச திருவிருந்து ஆராதனை. கதீட்ரல் தலைமை குருவானவர் அலுவலகம் போன் - 04639-277271.

ஊசிக்கோபுரம்
நெல்லை சந்திப்பில் இருந்து பாளையங்கோட்டை செல்லும் வழியில் முருகன்குறிச்சியில் அமைந்துள்ளது ஊசிக்கோபுரம் சி.எஸ்.ஐ. பேராலயமான (கதீட்ரல்) இந்த ஆலயம் 1826-ம் ஆண்டு கட்டப்பட்டது. 175 நாட்களில் இந்த ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் உயர்ந்த கோபுரம் பார்ப்பதற்கு கம்பீரமாகவும் அழகாகவும் இருக்கும். இவ்வாலய கோபுரத்தின் வடிவமைப்பை வைத்தே இதனை ஊசி கோபுரம் என்று மக்கள் அழைக்கின்றனர்.

சேர்மன்அருணாசலசுவாமிகோவில் - ஏரல்
தென் மாவட்டத்தில் புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில். நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் உள்ள ஏரலில் தாமிரபரணி ஆற்றங்கரையில் இக்கோவில் அமைந்து உள்ளது. கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக தன்னை நாடிவரும் பக்தர்களின் துயர் துடைத்து அருள் பாலித்துக் கொண்டு இருக்கிறார் சேர்மன் அருணாசல சுவாமிகள்.

திருச்செந்தூர் அருகே உள்ள மேலப்புதுக்குடி என்னும் அழகிய கிராமத்தில் ராமசாமி நாடாருக்கும் சிவணைந்தாள் அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தவர் சேர்மன் சுவாமிகள். இளம் வயதிலேயே தியானம் யோகம் மந்திரம் ஆகியவற்றைக் கற்று ஞானம் பெற்று விளங்கிளார். இளம் பருவம் முதல் ஏழை எளியோரின் துயர் போக்குவதற்காகவே அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் சுவாமிகள். அவரது தன்னலமற்ற சேவையைப் பாராட்டி அன்றைய ஆங்கில அரசாங்கம் 5-9-1906-ம் ஆண்டு அவருக்கு ஏரல் நகர சேர்மன் பதவியை வழங்கியது. அவரது 25-வது வயதில் அவரை இந்த பதவி தேடிவந்தது. இப்பதவியின் மூலம் ஏரல் நகர மக்களுக்கு பல்வேறு சேவைகளையும் வளர்ச்சி திட்டங்களையும் செய்தார்.

இப்பதவியின் காரணமாகவே அருணாசலம் என்ற அவரது பெயருடன் சேர்மன் என்ற பெயரும் இணைந்தது. மக்கள் பணியில் இருந்த போதும் தன்னுள் இருந்த தெய்வீக சக்தியால் விஷக்கடி மற்றும் இதர நோய்களால் பிணிக்கப்பட்டவர்களுக்கு நோய்களை தீர்த்து வைத்தார். இந்த அளவுக்கு சேவைகள் செய்துவந்த சேர்மன் அருணாசல சுவாமிகள் முன்திபேறு அடைந்த பின்னரும் இன்றுவரை தம்மை நம்பி வரும் பக்தர்களின் மனக்குறைகளையும் நோய்களையும் தெய்வமாக நின்று தீர்த்து வருகிறார். இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இதுபோல் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை தை அமாவாசையை முன்னிட்டு 12 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறும். அப்போது தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்தும் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டு வந்து தாமிரபரணியில் புனித நீராடிவிட்டு சுவாமியை தரிசனம் செய்வார்கள். சித்திரை மாத அமாவசையன்று பக்தர்கள் அளிக்கும் அரிசி காய்கறிகளை கொண்டு மறுநாள் குரு பூஜை நடத்தி அன்னதானம் வழங்கப்படுகின்றது. திருவிழாக் காலங்களில் நெல்லை மற்றும் தூத்துக்குடியில் இருந்து சிறப்பு பஸ்கள் விடப்படும்.
கோவில் தொடர்புக்கு போன் - 04639-2711281.

குரும்பூர்அருகேபக்தர்களைஈர்க்கும்வனதிருப்பதி


தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே 3 கி.மீட்டர் தூரத்தில் நாலுமாவடியை அடுத்து உள்ளது வன திருப்பதி கோவில். இக்கோயில் சென்னை ஹோட்டல் சரவண பவன் அதிபர் ராஜகோபால் கட்டியுள்ளார். ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருமலை திருப்பதி போன்று குட்டித் திருப்பதியாக குக்கிராமத்தில் புண்ணை நகாில் கட்டப்பட்டுள்ளது. இங்கு தினசரி ஆயிரகணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக வந்து செல்கிறார்கள். ஆந்திரா மாநிலம் செல்ல முடியாதவர்கள் வன திருப்பதி சீனிவாச பெருமாளை தரிசித்து நிம்மதியுடன் செல்கிறார்கள். இங்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி மாநிலங்களில் இருந்தும் பக்தர்க்ள குவிகிறார்கள். தினசரி காலை 7 மணி முதல் பகல் 1 மணிவரையும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடைதிறக்கும். புரட்டாசி சனிக்கிழமைகளில் மட்டும் 7 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து நடைதிறந்திருக்கும். இங்கு வரும் பக்தர்கள் உண்டியல் போட தேவையில்லை. எங்கும் உண்டியல் வைக்கப்படவில்லை. இலவச தரிசனமாக திருப்பதியை வணங்கி பூஜை நேரங்களில் பிரசாதம் பெற்றுச் செல்லலாம். இங்கு சுமங்கலி பெண்களுக்கு மங்களகரமான இலவச பொருட்கள் வழஙகப்படுகிறது. இதனை தொடர்ந்து ஆண்டாள் தரிசனம் செய்து மஞ்சள் பூசிக் கொண்டு வன திருப்பதி மூலஸ்தானம் செல்ல வேண்டும். துளசி தீர்த்தம் பிரசாதம் வழங்கப்படுகிறது. தங்கத்தால் ஆன கவசம் பக்தர்கள் தலையில் வைக்கப்படுகிறது. ஆசிர்வாதம் பெற்ற மக்கள் ஆந்திரா மாநிலம் திருமலை திருப்பதிக்கு சென்று வந்த மன நிம்மதி கிடைக்கிறது. கடைசியாக ஆஞ்சநேயர் சன்னதியை வணங்கி செந்தூர திலகமிட்டுக் கொள்ள வேண்டும்.

செல்லும்வழி
நெல்லை - திருச்செந்தூர் முக்கிய சாலையில் உள்ள குரும்பூர் வந்து அங்கிருந்து வன திருப்பதிக்கு மினி பஸ் மற்றும் அரசு பஸ்களில் செல்லும் வாய்ப்பு உள்ளது. தமிழக அரசு பஸ்கள் தினசரி குரூம்பூரிலிருந்து இத்திருத்தலத்துக்கு சிறப்பு பேருந்து இயக்க உள்ளது. சனிக்கிழமை தோறும் சிறப்பு ஆன்மீக சொற்பொழிவு நடந்து வருகிறது. பக்தர்களின் தேவைகளுக்காக இங்கு கடைகள், ஓட்டல் உள்ளது. தங்கி இளைப்பாறுவதற்கு வசதியாகக் கட்டிடங்கள். கழிப்பிடக் கட்டிடங்கள் பஸ் நிழற்குடை ஆகியவை உள்ளன. மொத்ததில் இது ஒரு சுற்றுலா ஸ்தலமாகவும் திகழ்கிறது. நாமும் ஒருமுறை சென்று வரலாமே!
0 comments

Leave a Reply