ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Geographical Status » வரலாறு


எல்கை 

எழில் மிகு ஆறுமுகநேரியின் எல்கைகளாக தொன்மைச்சிறப்புமிக்க நான்கு ஊர்கள் அமைந்துள்ளன. அவை கிழக்கே காயல்பட்டினம் மேற்கே மூலக்கரை தெற்கே வீரபாண்டியன்பட்டினம் வடக்கே ஆத்தூர் எனும் ஊர்கள் ஆகும்.

ஆறுமுகநேரி கந்தசாமிபுரம் காயல்பட்டினம் தென்பாகம் வடபாகம் என்ற நான்கு வருவாய் கிராமங்களின் தொகுப்பே இன்றைய ஆறுமுகநேரி.
வடக்கு 8.57 கிழக்கு 78.12 எனும் பாகைகளில் அமைவிடம் உள்ளது. பண்டைக் காலத்தில் கொற்கையைத் தலைமையிடமாகக் கொண்ட குட நாடு என்ற பிரிவில் இவ்வூர் இருந்தது. 1986 வரை திருநெல்வேலி மாவட்டப் பிரிவிலும் இப்போது தூத்துக்குடி மாவட்டப் பிரிவிலும் உள்ளது.
ஐவகை நிலங்களான குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை ஆகிய ஐந்தனுள் மருதமான வயல்வெளியும் நெய்தலான கடற்கரைப் பகுதியும் திரிந்த (சேர்ந்த) பகுதியாக உவர் நிலமாக ஆறுமுகநேரி அமைந்துள்ளது.
     
சங்க காலத்திற்கு முன்னும் பின்னும் மக்கள் வாழ்ந்ததற்கான பானை ஓடுகள் உடைந்த தாழிகள் கிடைக்கின்றன. முற்காலச் சிறப்புகள் உப்பளமாக மண் மேடிட்டுப் போயின. சுனாமி வெள்ளம் போன்ற பேரழிவுகளால் தாமிரபரணி தடம் மாறியது கடல் மண் மேடுகளால் பின் வாங்கிப் போனது.பெயர்க்காரணம்

ஆறுமுகனை வழிபடச் செல்வதற்கான வழி மக்கள் தங்களை மற்றவர்களிடமிருந்தும் பிற குழுக்களிடமிருந்தும் பிரித்துக்காட்டப் பெயர்களை (Name) வழங்கியது போல தாங்கள் வசித்த மண்ணிற்கும் பெயரிட்டுக் கொண்டனர். முற்காலத்தில் மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை நடத்தினர். இயற்கை மீது பற்றுக் கொண்டிருந்தனர். இயற்கையைத் தெய்வமாக வழிபட்டனர். தாங்கள் வாழ்ந்த இடத்திற்கு அச்சூழலுக்கேற்பப் பெயரிட்டுக் கொண்டனர்.
            
சங்கக்கால இலக்கியமான திருமுருகாற்றுப்படைவரிகள் திருச்செந்தூரைப் போற்றிப் பாடுகின்றனர். திருச்செந்தூர் செந்திலாண்டவரை : ஆறுமுகனை வழிபடச் செல்வதற்கான வழி என்ற பொருள்பட அமையப் பெற்ற சிறப்புமிக்க ஊர் ஆறுமுகநேரி என்று மக்கள் கூறுகின்றனர்.
            
”நெறி” என்றால் ”வழி” எனத் தமிழகராதி இயம்புகிறது. ஆறுமுகனைக் காண்பதற்குச் செல்லும் நெறி (வழி) ஆறுமுகநேரி என்று மருவியுள்ளது என மக்கள் கருதுகின்றனர்.
                                    ” குமரர்களை வென்று மயில் மேலிலங்கும்
                                      சீர்திரு செந்தில்பதி வேலலென்ற
                                      அறுமுகன் நேர்வழிப்பாதையென்று
                                      ஆறுமுகநேரி பெயர் ஆனதிங்கு”
என்று க.தூ. ராவின் பாடல் ஒன்று கூறுகிறது

ஜெகவீரபுரம்”  வீரபாண்டிய நல்லூர்”
ஆத்தூர் ஆற்றுக்கேத் தெற்கே ஆறுகல் தொலைவில் ஆறுமுகநேரி என்ற பேச்சு வழக்கு உள்ளதாக ஆசிரியர் மு.வே.ரா. கூறுகிறார்.
1200 ஆண்டுகளுக்கு முன்பு முற்காலப்பாண்டியர் பாணியில் அழகிய சிவன் கோயிலும் அதன் மேற்புறம் எழிலான தெப்பக்குளமும் அமைந்திருந்தது. பிற்கால வீரபாண்டி கட்டபொம்மு இக்கோயில் அருகில் தன்னுடைய நகரா மண்டபத்தை அமைத்திருந்தான். கால வெள்ளத்தில் அச்சிவன் கோயில் அழிந்து போனது. தெப்பக்குளம் பராமரிப்பின்றி தன்னுடைய பழமையான உயிரைப் போக்கிக் கொண்டிருக்கிறது. இத்தெப்பக்குளத்தில் கீழ்ப்புறப்படிக்கட்டோரத்தில் புடைப்புச்சிற்பமாக சுகாசன வடிவில் தெற்கே பார்த்த வண்ணம் முருகன் அருள் வழங்கிக் கொண்டிருக்கிறார். அவர் முன்பு காவடி எடுத்துக்கொண்டு வழிபட்டவாறு ஒரு பக்தனுடைய உருவம் காணப்படுகிறது. முற்காலத்தில் இத் தெப்பக்குளத்தில் நீராடி காவடி எடுத்துச்சென்றுள்ளனர். இவ்வூருக்கு ”ஜெகவீரபுரம்” என்ற பெயரும் உள்ளதாக ஆசிரியர் எம்.வி.ஆர்.கூறுகிறார். காயல்பட்டினம் காட்டுமகதூம்ஒலியுல்லா பள்ளியில் உள்ள கல்வெட்டொன்றின் மூலம் ஆறுமுகநேரி ”வீரபாண்டிய நல்லூர்” என்றழைக்கப்பெற்றது அறியலாகிறது. அக்காலத்தில் தற்போதைய குரும்பூர் நல்லூர் குரும்பிலான இராசேந்திர நல்லூர் என்றும் வீரபாண்டியன்பட்டினம் சோணாடு கொண்டான்பட்டினம் என்றும் பாண்டியன்பட்டினம் என்று வழங்கப்பெற்றது.
ஆற்றுமுகநகரி
. தாமிரபரணி பொதிகை மலையில் தோன்றி நீண்ட தூரம் ஓடிவந்து கடலில் கலக்கிறது. தாமிரபரணி ஆற்றின் இரு கிளைகள் (ஓடைகள்) ஆறுமுகநேரி வழியாக காயல்பட்டினம் கடலில் சென்று கலந்தன. அதன் வழித்தடங்களில் ஒன்று தற்போது மத்திய உப்பு இலாகா அலுவலகத்திற்கு வடபுறம் அமைந்துள்ளது. மற்றொன்று சீனந்தோப்புக்குத் தென்புறம் வழியாக காயல்பட்டினம் ஓடக்கரைக்கு முன்பாகச் சென்றது.
     
ஆற்று முகத்துவாரத்தில் அமைந்த நகராக விளங்கியதால் ஆற்றுமுகநகரி காலவெள்ளத்தில் ஆறுமுகநேரி ஆகத்திரிபு பெற்றது எனலாம். ஆறு என்பது எண் வரிசையில் ஆறினையும் தாமிரபரணி ஆற்றின் ஆற்றையும் குறிக்கும் தன்மையுடையது. முகம் என்பது மனிதனுடைய முகத்தையும் முகத்துவாரம் என்ற பொருளையும் தரவல்லது. நேரி நெறி என்பது வழியைச் சுட்டுகிறது நேரி என்பது நகரியின் திரிபாகலாம். திருநள்ளாறு - ஆற்றிற்கு இடையே அமைந்த ஊர்ப்பெயராகும். இதில் நள் என்பது இடையே என்பதாகும். ஆற்றினிடையே என்ற பொருளில் திருநள்ளாறு அமைந்தது. இவ்வாறு ஆற்றின் அருகே முகத்துவாரத்தில் அமைந்த நகரம் ஆறுமுகநேரி ஆகும். ஆறுமுகநேரி அருகே ஆற்றினடிப்படையில் பெயர்களைக் கொண்டுள்ள ஊர்கள் ஆத்தூர் காயல்பட்டினம் மூலக்கரை ஆகும். ஆற்றின் பெயரால் ஆத்தூர் கடலும் ஆறும் கலக்கும் இடம் காயல் எனப்படும். அடினடிப்படையில் காயல்பட்டினம் - ஆற்றின் கரையின் ஒரு பகுதி மூலக்கரை. இவ்வாறு சங்கத்தமிழ் பெயர்களாக ஊர் பட்டினம் கரை என்ற பெயர்களிடையே நகரி என்ற பெயரும் அமைந்துள்ளது எனக் கருத இயலும்.


ஆறுமுகன்+ஏரி


ஆறுமுகன் பெயரில் ஏரி ஒன்று முற்காலத்தில் இருந்ததன் காரணமாகவும் ஆறுமுகன்+ஏரி - ஆறுமுகநேரி என்று ஆகியிருக்கலாம் (சான்று - நான்கு+ஏரி=நான்குநேரி)
                                    ”எண்ணென்ப ஏணை எழுத்தென்ப இவ்விரண்டும்
                                    கண்ணென்ப வாழும் உயிர்க்கு”
என்று எண்ணையும் எழுத்தையும் பெருமை செய்யும் திருவள்ளுவரின் குறளுக்கொப்ப எண் ஆன ஆறு என்றும் இயற்கையான ஆறு என்றும் இவ்ஊரின் பெயர் தொடங்கியுள்ளது சிறப்பியல்பாகும் 


தாமிரபரணியும் ஆறுமுகநேரியும்


கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் நிலவியல் அமைப்பு மற்றும் அரசியல் பண்பாடுகள் பற்றி அறிவதற்குப் பெருந்துணையாக நிற்பவர் தாலமி (கி.பி. 119-161) எகிப்து நாட்டைச் சேர்ந்த பேரறிஞர் ஆவார். கணிதம் புவியியல் துறையில் வல்லுநரான அவருடைய ஆய்வுக்குறிப்பில் தமிழகத்தின் தென்பகுதியில் அமைந்துள்ள தாமிரபரணி ஆறும் சிறப்பு வாய்ந்த கொற்கைத் துறைமுகம்  இடம் பெற்றுள்ளது.   தாலமியின் குறிப்பின்படி தாமிரபரணி ஆறு ”சோலன்” என்றழைக்கப்பெற்றது. ஏரலிலிருந்து ஒரு கிளை பிரிந்து ஆறுமுகநேரியின் பகுதி வழியாக ஓடிச்சென்று காயல்பட்டினம் கடலில் சங்கமித்தது என்கிறார்.
செயற்கைக் கோளிலிருந்து எடுக்கப்பட்ட பல அரிய படங்களை ஆய்வுச்செய்து தொன்மச் சிறப்புகள் கண்டறியப் பெற்றுள்ளன. இணையத்தளத்தில் (SCIENTIFIC CORRESPONDDENCE) என்ற பகுதியில் கொற்கைத்துறைமுகம் பற்றியப் புதிய கண்டுபிடிப்புகள் (RECONSTRUCTION OF THE ANCIENT PORT, KORKAI IN THOOTHUKUDI DISTRICT OF TAMILNADU) என்ற கட்டுரையும் இணைக்கப்பெற்ற படங்களும் தாலமியின் குறிப்புகளுக்குத் துணையாக அமைந்துள்ளன.
     
தாமிரபரணியின் ஆற்றின் முற்கால ஓடு பாதையின் தடயங்கள் மூலம் அது ஓடிய காலம் நிலவியல் ஆய்வின் வழி உறுதி செய்யப்பட்டுள்ளன. கி.பி.8 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் ஏரல் அருகே தாமிரபரணி ஆற்றின் ஒரு கிளை ஆறு பிரிந்து ஆறுமுகநேரியின் ஒரு பகுதியில் ஓடி காயல்பட்டினம் அருகே கடலில் சென்று கலந்தது. இவ்வாறு ஆறு ஓடிய ஆறுமுகநேரி மற்றும் காயல்பட்டினம் பகுதியில் தலைசிறந்த துறைமுக வணிக மையம் அமைந்திருந்தது. இதற்கு ஆதாரமாக மக்கள் வாழ்ந்த இடங்களுக்கான தடயங்கள் கட்டடங்களின் இடிபாடுகள் அறுத்தச் சங்குகள் முத்துச் சிப்பிகள் மற்றும் தானியங்கள் பொருட்களைச் சேமித்து வைத்திடப் பயன்படுத்தப்பட்ட சுடுமண் உறைகள் ஏராளமாகக் காணப்படுகின்றன. கப்பலும் சிறு படகுகளும் வந்து சென்ற வழித்தடம் இப்போது “கப்பலோடிய கசம்“ என்றழைக்கப்படுகிறது.
     
மேலும் சங்க காலமான கி.மு. 180 - கி.பி. 290 இதற்கு முற்பட்ட காலத்தின் பெரிய அளவிலான செங்கற்கள் (இப்போது கொற்கையில் கிடைப்பது போல)  ஏராளமாகக் கிடைக்கின்றன. ஆழிப்பேரலை (சுனாமி)யாலும் கடல் பின் வாங்கியதாலும் பொலிவிழந்து ; அழிந்து மண்மேடிட்டுப் போயின.
ஏலங்கான்பட்டினம் - இ()லங்கத்தம்மன்
16.06.2003 இல் கொட்டமடைக்காடு (கோட்டை இருந்த இடம் கோட்டைமேடு திரிபு பெற்றது) சீலாக்காடு (முத்து குளிக்கப்பட்ட இடம் சிலாபக்காடு இவ்வாறு திரிபு பெற்றது) பகுதியில் 1100 ஆண்டுகளுக்கு முற்பட்டக்கோயிலின் சிதறுண்டப் பாகங்களும் ஐம்பொன்னாலான நடராசர் உமாதேவி விஷ்ணு துர்க்கை மற்றும் பூசைக்கான உபகரணங்களும் கண்டறியப்பட்டன. இவற்றின் மூலமும் பாண்டியர் கால மீன் முத்திரைக்கல் மூலமும் இவ்விடம் தேரோடிய வீதிகளுடன் மிகப்பெரிய வணிகச் சந்தையாக இருந்தது என்பதை அறியலாம்.  தாலமியின் குறிப்பின்படி கடற்கரைப் பகுதியில் இருந்த ஏலங்கான் பட்டினம் வணிகச் சந்தை இதுவே. கொற்கைக் குடா என்ற பகுதிகளுக்குள் காயல்பட்டினம் ஆறுமுகநேரி இருந்துள்ளன. காயல்பட்டினம் ஆறுமுகநேரி இரு ஊர்களுக்கும் எண்ணற்றத் தொடர்புகள் இருந்தன.
            
தற்போது ஆறுமுகநேரிப் பகுதியில் மட்டும் அ(ஏ)லங்கத்தம்மன் வழிபாடு பல இடங்களில் உள்ளன. இவ்வழிபாடு தொன்மச் சிறப்புமிக்கதாகும். ஏலங்கான் வணிகச் சந்தையில் (கொற்கையில்) முற்காலப் பாண்டியர்களால் வழிபடப் பெற்ற தெய்வம் இ(ஏ)லங்கத்தம்மன் ஆகும்.


 
சவுக்கைகள்


மக்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவுகள் பிணக்குகள் இவற்றைத் தீர்த்துக் கொண்ட இடம் சவுக்கை எனப்பட்டது.
             
செவ்வகம் அல்லது சதுரவடிவிலான திண்ணை. அதன் நான்கு ஓரங்களிலும் தூண்கள் எழுப்பப்பட்டு அதில் மோட்டுக்கால் பரப்பிக் கூரை அல்லது ஓடு வேயப்பட்டு இருக்கும்.
             
இச்சவுக்கைகள் ஊரம்மன் கோயிலுடனோ அல்லது குடும்பக் குலதெய்வக் கோயிலுடனோ தொடர்புடையதாக உள்ளன. தெய்வத்தைச் சாட்சியாகக் கொண்டு வழக்குகள் பேசப்பட்டன. நீதி வழங்கப்பட்டது. அவசரக்கால அழைப்பென்றால்  கோயில் மணி அடிக்கப்பட்டது. காவல்துறை மற்றும் நீதி மன்றங்களின் செயல்பாடுகள் அதிகரித்தப் பின்பு இச்சவுக்கைகள் கோயில் கொடைவிழா குறித்துப் பேசுவதற்காகப் பயன்படுத்தப் பெற்று வருகின்றன.
சவுக்கைகள்

1)         மேலத்தெரு         7)         சீனந்தோப்பு
2)         நடுத்தெரு8)         பேயன் விளை
3)         இலட்சுமிமாநகரம்           9)         காணியாளன் புதூர்
4)         பூவரசூர்10)       இராணிமகராஜபுரம்
5)         திசைக்காவல் தெரு11)       வன்னிமாநகரம்
6)         சுப்பிரமணியபுரம்
ஆகிய பகுதிகளில் கிராம நீதிமன்றமாக இருந்துள்ளன. பழமையான சிற்றூர்களில் இத்தகைய சவுக்கைகள் மரத்தின் அடியிலும் கோயில்களின் அருகிலும் அமைந்திருந்தன. கொற்கை துறைமுக நகரின் ஒரு பகுதியாக விளங்கிய ஆறுமுகநேரி பிற வளநாடுகளின் தலைமையிடமாகச் சங்ககாலத்தில் திகழ்ந்தது.


குளங்கள் 

அந்நாளில் தாமிரபரணி ஆற்றின் ஒரு கிளை ஆறுமுகநேரி வழியாக ஓடி காயல்பட்டினம் கடலில் சென்று கலந்தது. இந்நாளில் அத்தகைய வளமிக்க பூமியில் இன்று குளஙகள் ஏராளமாக உள்ளன. நீர் பெருகுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன. நல்லூர் குளம் கடம்பாகுளம் ஸ்ரீவைகுண்டம் தென்கால் என வழிகள் பல விரிவாக உள்ளன. நீர் துள்ளிக்குதித்து தினமும் ஓடிவர வாய்ப்புகள் இல்லை. வடகாலில் வளம் கொழித்திட தென் காலின் கடைப்பகுதி நலிந்திட ஆறுமுகநேரி வானம் பார்த்திடும் நிலை மாறுதல் வேண்டும். 
     ஆறுமுகநேரியில் காணப்பெறும் குளங்களின் (குளம்=ஏரி)
அடிப்படையில் இரண்டு வகைகளாக உள்ளன.
     1)    வழிபாட்டிற்கான குளம் (கோயில் சார்ந்த குளம்)
     2)    விவசாயத்திற்கான குளம்
1.    கோயில் சார்ந்த குளம்
அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வர் (அழிந்துவிட்டது) தெப்பக்குளம் காமராஜர் பூங்காவில் உள்ளது. இத்தெப்பத்தில் நீராடி காவடி எடுத்துச் சென்றுள்ளனர்.
2.   விவசாயம்
1.    புதுக்குளம் என்ற பொய்யங்குளம்
     2.    பண்டாரங்குளம்
     3.    குதிரைக்குளம் என்ற குதிரைக்கான்குளம்
     4.    வடக்குத்தெரு குளம்
     5.    மேலத்தெரு தெப்பக்குளம்
     6.    சீனந்தோப்பு ஸ்ரீ பார்வதி அம்மன் கொயில் எதிரே தெப்பம்
     7.    நத்தக்குளம்
     8.    நாலாயிரமுடையார் குளம்
     9.    திருவக்குளம்
     10.   வண்ணான்குளம்
     11.   துலுக்கன்குளம்
முற்காலத்தில் இக்குளங்களின் பின்னணியில் வேளாண்மை செழித்திருந்தன என்பதை உணரலாம்.செக்குகள்

வணிக நகரங்களின் எச்சங்களாக செக்குகள் இந்நாளில் காணப்படுகின்றன. ஆறுமுகநேரியின் மேற்குப்பகுதியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிதைந்த நிலையிலான பல கல்செக்குகள் காணப்படுகின்றன. இச்செக்குகள் மூலம் இவ்ஊரின் வணிகச்சிறப்பினை உணரலாம். இராணிமகாராஜபுரத்திலும் இத்தகைய பழமையான கல்செக்குகள் உள்ளன. பிற ஊர்களிலிருந்து எண்ணெய் வணிகத்தின் பொருட்டு மக்கள் எந்நேரமும் வந்து சென்றுள்ளனர்.உப்பு

உப்பு தூய்மையானது ஆகும். வேளாண்மையும் உழவும் தோன்றிய காலத்தில் உப்பை உணவில் சேர்க்கும் வழக்கம் தோன்றியது.
“உப்பில்லா பண்டம் குப்பையிலே“ என்ற பேச்சு வழக்கு தமிழ்நாட்டில் உள்ளது. உப்பளங்கள் என்றழைக்கப்பெறும் உப்பு வயல்கள் மூலம் உப்பு தயாரித்தல் ஆறுமுகநேரி மக்களின் தொழிலாக உள்ளது. சங்க காலத்தில் ஆறுமுகநேரியில் விளைந்த உப்பு காயல்பட்டினம் துறைமுகம் வழியாகவும் கொற்கைத் துறைமுகம் வழியாகவும் ஏற்றுமதி ஆனது. ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் உப்புத் தயாரிக்கும் தொழிலில் ஆண் பெண் இருபாலரும் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்மேற்குப் பருவகாற்று வராதவாறு குற்றாலமலை தடுக்கிறது. வடகிழக்குப் பருவக்காற்று அதன் நக்தியினைக் காட்டாத சூழலும் உப்பு விளைவிப்பதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. “ஆறுமுகநேரி உப்பு“ தரமிக்கதாகப் போற்றப்படுகிறது.
தமிழரின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாக உப்பு அமைந்துவிட்டது. “உப்பிட்டவரை உள்ளவும் நினை“ என்ற பழமொழி மக்களுடன் இயைந்துள்ளது. சடங்குகள் நேர்த்திக்கடன்கள் இறப்புச் சடங்குகள் இவற்றில் உப்பு இடம் பெறுகிறது. 
இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னர் உப்பு உற்பத்தி மற்றும் வணிகம் கருதி ஆறுமுகநேரியின் வடபகுதியில் உப்பு இலாகா அலுவலகத்தை பிரிட்டிசார் அமைத்தனர். அவ்வலுவலகம் தற்போது மத்திய அரசின் ஒரு பிரிவாக இயங்கி வருகிறது.
1942-இல் நடைபெற்ற கீரனூர் உப்புசத்தியாகிரகப் போராட்டம் புகழ்பெற்றது ஆகும். அந்நாளில் இப்போராட்டத்தில் பல வீர இளைஞர்கள் தன்னார்வமுடன் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். மழைக்காலத்திற்குப் பின்பு உப்பளத்தை சீர் செய்வர். உப்பு விளைவதற்கேற்ற       “உவர்விளை உப்பின் உழாஅ உழவர்“ என்று நற்றிணை (831 : 1) பாடலும் கூறுகிறது. உப்பு உற்பத்தியான பின்பு உப்பை வாங்குவதற்கு எவரும் வருகின்றனரா? என்று எதிர்நோக்கியிருந்தனர் என்பதை 
                          “உவர் விளை உப்பின் உழா அ உழவர் 
                        ஓகை உமணர் வருபதம் நோக்கி 
                        கானல் இட்ட காவற்குப்பை“ - நற்றிணை (33 : 1-3)
என்ற பாடலும் கூறுகிறது. உப்பு வியாபாரிகள் மாட்டுவண்டிகளிலும் கழுதைகள் மீதும் உப்பை ஏற்றிக்கொண்டு சென்று அதற்கு நெல்லை மாற்றுகின்றனர். வீதியில் உப்பு விற்றுச் சென்ற ஒருத்தி உப்பை நெல்லுக்கு மாற்றுகிறாள். பின்வரும் பாடல்கள் மூலம் அது கூறப்பட்டுள்ளது.
                        “தந்நாட்டு விளைந்த வெண்ணல் தந்து 
                        பிறநாட்டு உப்பின் கொள்ளை சாற்றி“        குறுந்தொகை (269 : 4-6)
                        "கதழ்கோல் உமணர் காதல் மடமகள் 
                        சில்கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி 
                        நெல்லின் நேரே வெண்கல் உப்பெனச் 
                        சேர்விலை மாறு கூறலின்”                            அகம் (140 : 5-8)
                        “நெல்லும் உப்பும் நேரே ஊாீர் 
                        கொள்ளீரோவெனச் சோரிதொறும் நுவலும்“        அகம் (390 : 5-8)
உப்பை வெண்கல் அமிழ்தம் என அகநானூற்றுப் பாடல் (270 : 2) கூறுவது சங்ககாலத்தில் உப்பு மீது மக்கள் கொண்டிருந்த பற்றினைக் காட்டுகிறது.


உப்பு மாலை வழிபாடு


உப்பளத்து வேலையான செயினத்து தொடங்குவதற்கு முன்னதாக உப்புப்பாத்தியின் வட மேற்கில் மணலில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபடுகின்றனர்.
             
உப்பு விளைவதற்கு முன்பாக ஒரு சணலை மாலையாகக் கட்டி உப்புப்பாத்தியினுள் போட்டு வைக்கின்றனர். உப்பு விளையும் போது சணலுடன் சேர்நது உப்பு மாலையாகக் காட்சியளிக்கும். இவ் உப்பு மாலையைப் பிள்ளையாருக்கு அணிவித்து வழிபடும் வழக்காறு ஆறுமுகநேரியில் உள்ளது.


வேளாண்மை


“அகிலா மறை விளங்கும் அந்தணரா குதி விளங்கும் 
     பலகலையாம் தொகை விளங்கும் பாவலர் தம் பாவிளங்கும்
     மலர்க்குலாம் திருவிளக்கு மழை விளங்கும் மனு விளங்கும்
     உலகெலாம் ஒளிவிளங்கும் உழவர் உழும் உழவாலே"
                                                                                         - ஏரெழுபது 4: 10. 
என்ற பாடல்களுக்கிணங்க உழுதுண்டு பல்லுயிர் காக்கும் விவசாயத்தில் நீங்காப்பற்று உடையவர்களாக ஆறுமுகநேரி மக்கள் உள்ளனர். தங்களுடைய நிலத்தில் நேரடியாக நின்று விவசாயப் பணிகளைச் செய்வதைப் பெருமையாகக் கருதுகின்றனர். கட்டபொம்மன் காலத்தில் ஆறுமுகநேரி நாடார்கள் மற்றும் பிள்ளைமார்களுக்குச் சொந்தமான வயல்கள் கொள்ளையடிக்கப்பட்டன. ஒருமுறை கொள்ளையடிக்க வந்த கட்டபொம்மனைச் சுற்றிலும் உடைமுள்ளைப் போட்டுத் தீ வைத்ததில் கட்டபொம்மன் தப்பிப் பிழைத்ததாக செவிவழிச்செய்தி உள்ளது.பனை

  “கற்பகத்தரு“ என்றழைக்கப்பெறும் பனை மரங்கள் நிறைந்த பகுதியாக ஆறுமுகநேரி உள்ளது. இங்கு பனைவெல்லம் புட்டுக்கருப்புக்கட்டி பனம்பாகு பனங்கற்கண்டு தயாரித்தல் நடைபெற்றது. உப்பு நெல் மற்றும் கருப்புக்கட்டி வியாபாரங்கள் பொதிமாடுகள் மூலம் மதுரை வரை நடைபெற்றன. நாஞ்சில் நாட்டிலிருந்து பனைத்தொழில் புரிந்தோரை அழைத்து வந்து பனை விவசாயம் நடைபெற்றது. தற்காலத்தில் பனைமரங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காண முடிகிறது.

 
கல்வெட்டு – செப்பேடு - ஆறுமுகநேரியின் பெருமைக்குச்சான்று

ஆறுமுகநேரிக் கல்வெட்டு


இடம் - தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம்  ஆறுமுகநேரி திசைகாவல் தெருவில் உள்ள குருநாதசாமி கோயில் வளாகத்தில் முண்டகசாமி என்று வழிபடப் பெற்று வரும் வெள்ளைக்கல்.
            
காலம் - சகம் 1582 (கி.பி. 1660) சொக்கநாதநாயக்கர் காலம் (கி.பி.1659 - 1682)

செய்தி - 120 செ.மீ.உயரம் 45 செ.மீ அகலம் கொண்ட கல்லின் மூன்று பக்கங்களின் கல்வெட்டுள்ளன. 

 எழுத்துக்கள் பல இடங்களில் பொரிந்துள்ளன. அசுபநாடு என்ற நிர்வாகப் பிரிவில்           ஆறுமுகநேரி இருந்தது அறியலாகிறது. அசுபம் என்றால் குதிரையாகும். எனவேகுதிரை வணிகத்தோடு தொடர்புடைய பகுதியாக ஆறுமகநேரி விளங்கியதை எடுத்துக்காட்டுகிறது.           சமகாலத்தில் நாடார்களை நிர்வாகிகளாகக் கொண்ட மானவீர வளநாடு திருவழுதிவளநாடு
என்றநிர்வாகப் பிரிவுகளும் இப்பகுதியில் இருந்துள்ளன. தற்போதுள்ள வட்டம் போல            அந்நாளில் நாடு என்று சிறு பகுதிகள் அழைக்கப்பெற்றன. வைகாசி விசாகத்திற்குத் திருச்செந்தூர்           செல்லும் அடியார்களுக்கு ஆறுமுகநேரியில் அன்னதானம் செய்திட அசுப நாட்டு நிர்வாகி மேற்கு ஆறுமுகநேரியில் மூன்று விளைநிலம் தானமாக வழங்கியுள்ளார். இக்கல்வெட்டில்ஆறுமுகநேரி என்ற சொல் வழக்கு கி.பி.1659 இல் இருந்தது அறியலாகிறது. தொன்மச்சிறப்பு
வளமை தானதர்மம் மிக்க ஊர்களின் பெயர்கள் மட்டுமே நாயக்கர் ஆட்சியில் கல்வெட்டுகளில்  இடம் பெற்றுன.

முதல் பக்கம்இரண்டாம் பக்கம்மூன்றாம் பக்கம்
1. சகாபத்17. செய்த தன்39. கவும் கட்ட
2. ம் 15 18. மசாதண40. ளையிட்ட
3. 80 உ19. ம்மாவது41. மடத்துக்கு
4. மேல்செ20-24......42. த் தெற்கு பல
5. ல்லா நின்25. ர்விசாக43. ாத்து எ
6. ற கொல்26-28 .........44. ல்லைக்கு வட
7. லம் 840    29. விட்டது45. க்கு வி
8. வருடம்    30. கு புண்ணி46. ளை மூன்று
9. ற்பிசி ...    31. யசேஷத்47. மேற்கு அறு
10. .....32. ம் ஊர் அள48. முகனேரி
11.  .....33. வு வெட்ட
12. சுப யோ34. அசுப நா
13. க சுபகர 35. ட்டுப்
14. ணமும்36.  ........
15. பற்ற ரேவ37. புண்
16. தி நாள்ச்38. ணியமா

ஆறுமுகநேரி செப்பேடு


இடம்                         இச்செப்பேடு திருவாவடுதுறை ஆதீனத்திடம் உள்ளது.
காலம்  கொல்லம் 872 (கி.பி. 1697) இராணிமங்கம்மமாள் (கி.பி.1689 - 1706) காலத்தைச் சேர்நதது.

அமைப்பும் செய்தியும்


அழகிய பூவேலைப்பாடு மிக்க கைப்பிடியுடன் உள்ளது. முருனின் வேல் குறுக்காக உள்ளது.முருகனின் வேல் குறுக்காக உள்ளது. செப்பேட்டின் நீளம் 22 செ.மீ அகலம் 14 செ.மீ 49வரிகளுடன் உள்ளன.


செய்தி 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தினசரி வழிபாடு கட்டளைகள் நடத்திட.திருச்செந்தூர்  கோயிலுக்காக குடனாடான ஆறுமுகநேரியில் நிலம் விடப்படுகிறது.300 ஆண்டுகளுக்கு முன்பு ஆறுமுகநேரி சீனந்தோப்பு வள்ளிவாய்க்கால் மணக்காடு சோனகப்பட்டணம் (காயல்பட்டினம்) என்ற பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
்ளை உ
 1. உ ஆறுமுகநேரிப் பட்டையம் சுவத்திற சாலிவாக
 2. ன சகாத்தம் 1619 க்கு செல்லா நின்ற
 3. கொல்லம் 872 ஈசுபர வைய்காசி மாதம்
 4. 14 உதிதி பூறுவ பட்சத்தில் திரிதிகையும் சுக்கிறவார
 5. மும் சுபயோகமும் சுபகரணமும் பெற்ற மிறுக சீரள
 6. நட்ச்செத்திரத்தில் நாளச் செய்த தன்ம சாதனப்பட்
 7. டையமாவது குடனாடான திருச்செந்தூர் செந்தி
 8. மானகரத்திலிருக்கும் சுப்பிரமணிய சுவாமி கோயில்தல
 9. த்தாரில் நாராயண பிள்ளை உடையா பிள்ளையேன் கீள் வேம்
 10. பு நாடான நாடான திருநெல்வேலியிலிருக்கும் யிளைய பெ
 11. ருமாள் பிள்ளைசுந்தரத் தோள்பிள்ளைக்குப் புண்ணி
 12. யம்யெளுதிக் குடுத் பரிசாவது குருக்களுக்கு புண்ணிய     
 13. வும்ர ாயர் தளவாய் நரசப்பயயனவர்களுக்குப் புண்ணிய
 14. மாகவும் வடமலையப்ப பிள்ளை யென் மகனுக்குப் புண்ணியமாக
 15. வும் முத்துனாயகம் பிள்ளைக்குப் புண்ணியமாகவும் திருச்செ
 16. ந்தூர் சாமி கோவில் போத்திமார். தானத்தார் தலத்தார் முதலிய
 17. லான பேருகளுக்குப் புண்ணியமாகவும் சுவாமி சுப்பிரமணிய
 18. சுவாமி கோவில் கட்டளை நடத்தும்படிக்கு யவர்களுக்கு நான்
 19. விட்டுக் குடுக்கிற நிலமாவது என நிலமையான ஆறுமுகநே
 20. ரியை விட்டுக் குடுத்தபடியினாலே யிதற்கு கிறையம் நிஷ்
 21. ச்சியற்றுக்கு பொன் 105 ஊசிக்காந்தம் பணம் 1ஆக நூத்தி
 22. அஞ்சு பொன்னும் ஒரு பணம் யிந்தப் பொன் பணம் 105
 23. பணம் 1க்கு நான் விட்டுக்குடுத்த ஆறுமுகநேரிக்குள்
 24. வகையாவது சோனகப்பட்டணத்தார் எல்கைப் படி
 25. தென்வடல் ஓடிய பாதைக்கு மேக்கு தென் எல்கை
 26. மாயக்கூத்தர் திருவிடையபட்டம் மணக்காடு சீனந்
 27. தோப்பு எல்கைக்கும் வடக்கு. மேல் எல்கையாவது
 28. மேற்பார் எல்கைக்கும் வள்ளி வாய்க்காலுக்கு கிளக்கு
 29. வட எல்லையாவது சோனகப் பட்டணத்தார் எல்கை
 30. கீள்மேலோடிய பாதைக்கு தெக்கு ஆக யின்னான்ங்
 31. கு எல்லைக்குள்பட்ட நஞ்சை புஞ்சை பலப்பட
 32. டை சொன்னதாயமும் மேல் நோக்கிய மரமும் கீ
 33. ள் நோக்கிய கிணறும் நிதி நிச்சயம் முதலானது
 34. க்கெல்லாம் யிவர்களே யோக்கியமாக ஆச்சந்த
 35. ராக்கும் சந்ததப் பிரவேசம் அனுபவிற்றுக் கொண்
 36. டு சுவாமிக்குக் கட்டளை நடத்திவச்சுக் கொள்வாரா
 37. கவும் யிந்த தற்மத்தை யாதாம் ஒருவர் பரிபாலனம்
 38. பண்ணின போர்கள் அசுவமேத யாகம் பண்ணின
 39. பலத்தைப் பெறுவாராகவும் யிந்த தற்மத்துக்கு அகுந்த
 40. ம் பண்ணின பொர்கள் செங்கைக் கரையில் காராம்ப
 41. சுவைக் கொன்ற தோஷத்தில்ப் போவாராகவும் யி
 42. ப்படிக்குச் சம்மதிற்று யிந்த தற்ம சாதனப் பட்டை
 43. யம் யெளுதிக் குடுந்தோறும் தலத்தாரில் நாராயண பி
 44. ள்ளை உடையா பிள்ளையேன் யிளைய பெருமாள் பிள்ளை
 45. சுந்தரத்தோள் பிள்ளைக்கு யிப்படிக்கு நாராயண பிள்ளை
 46. உடையாபிள்ளை யிப்படிக்கு யிவர்கள் சொல்லாயிந்த
 47. தற்ம சாதன பட்டையும் எளுதினேன் நாட்டுக் கணக்கு
 48. இரங்கனாத பிள்ளை மருமகன் கள்ளப்பிரான் எளு
 49. ற்று யிப்படி அறிவேன் நயினா பிள்ளை உ
1.போத்திமார் - மூலவருக்குப் பூசை செய்பவர்கள் அத்துவைத இனத்தவர்  தென்கன்னட மங்களூரின் மங்களபுரத்தைச் சேர்ந்தவர்கள்.
2.தலத்தார் - முக்காணியர்,திரிசுதந்திரர், கட்டளைகளை நிறைவேற்றுவதால் கட்டளை ஐயர் என்றும் அழைக்கப்படுவர் உள்ளூரில் உள்ளபிற சாதியினரும் தலத்தார் ஆவர்.
3. தானத்தார் - தானாவதிப்பிள்ளைஎன்று அழைக்கப்படும் திரிசுதந்திரர்கள். சுவாமி      எழுந்தருளும் காலத்தில் உடன் சென்று சண்டை சச்சரவு வராமல் பாதுகாப்பவர் இவர்.


சிறப்பு வாய்ந்த கட்டபொம்மன்  காலத்துக் கல் மண்டபம்


பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான திக்கு விசய கட்டபொம்முவின் மகனான வீரபாண்டியக் கட்டபொம்மு நாயக்கரின் ஆட்சிக் காலம் 02.02.1790 முதல் 16.10.1799 ஆகும்.
     
இக்காலத்தில் திருச்செந்தூர் செந்திலாண்டவர் மீது பக்திக்கொண்ட கட்டபொம்மன் திருச்செந்தூரில் மதிய உச்சிகால வழிபாடு முடிந்தவுடன் உணவு அருந்தும் பழக்கத்தைக் கொண்டிரந்தார். இம்மணியோசையை அறிவதற்குத் திருச்செந்தூரிலிருந்து பாஞ்சாலங்குறிச்சி வரை மணிமண்டபங்களை அமைத்து தொடர்ச்சியாக ஒலி எழுப்பிடக் காவலர்களை நியமித்திருந்தார்.
     
அத்தகைய மணிமண்டபம் ஆறுமுகநேரியில் தற்போதுள்ள காமராஜ் பூங்காவின் கீழ்ப்புறம் அமைந்திருந்தது. வேல்வழிபாடு செய்வதற்கு வேல் மண்டபமும் சிவாலயமும் இருந்தன. இவ் ஆலயத்திற்கு மேற்ப்புறம் அழகிய தெப்பக்குளம் உள்ளது. கட்டபொம்மன் பங்குனி உத்திரத் திருநாளன்று திருச்செந்தூர் செல்லும் வேளை குதிரைகளுடன் இளைப்பாறிட ஆறுமுகநேரி மணிமண்டபத்தில் தங்கினான். அந்நேரம் இராமலெட்சுமி அம்மன் கோயில் சிறப்பு பூசையை முன்னிட்டு காயல்பட்டினம் கடற்கரைச் சென்று தீர்த்தமாடி விட்டு தூசிமாடசாமி அலங்காரமாக வீதிவலம் வருகின்றார். சாமியாடி தூசிமாடசாமியின் ஆயுதமான தொன்மையான வாளை வீசியவாறு அருளுடன் வந்து கொண்டிருந்தார்.
     
இக்காட்சியை கண்ட கட்டபொம்மு ஏளனமாக “என்ன இச்சாமி துருப்பிடித்த சிறிய வானளச் சுற்றுகிறதே வலுமிக்க என்னுடைய வாளைச் சுற்றுமா?“ என்று தன் அமைச்சரிடம் கூற இதை உணர்ந்த தூசிமாடசாமி அருள்வரப் பெற்று ஆடிய சாமியாடி “சுழற்றிக் காட்டுகிறேன்“ என்றுக் கூறி கட்டபொம்மனின் வாளைப் பெற்று சுழன்று சுழன்று ஆடினார். சாமியைச் சோதித்ததற்கு மன்னிப்புக் கோரிய கட்டபொம்மு தம்முடைய வாளைச் சாமிக்கு வழங்கியதோடு இராமலெட்சுமி அம்மன் கோயிலுக்கு மகா மண்டபம் ஒன்றினைக் கட்டிக் கொடுத்தார்.
     
தரையில் கற்றூண்களை நிறுத்தி அதில் கல் விட்டங்களைப் பொருத்தி அதன் மீது கல்கைகளை மாட்டி அதன் மீது மோட்டுவளைகளைக் கல்லாலேயே செய்து கட்டிடக் கலை நுட்பம் செறிந்த மண்டபமாக அதனைக் கட்டிக் கொடுத்துள்ளார். கட்டபொம்மு மண்டபம் சிறியதாக இருப்பினும் அதில் கையாண்டிருக்கும் தொழில் நுட்பம் போற்றுதலுக்குரியது.மண்டபத்தின் கூரையானது மரத்தாலான கைகளைப் போல் கல்லால் கைகளைச் செய்து காட்டியிருப்பது வேறெங்கும் காணயியலாத சிறப்பு ஆகும்.

0 comments

Leave a Reply